ADDED : மே 15, 2026 07:23 PM
மதுரை: மதுரை ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு 3 வார விழிப்புணர்வு பிரசாரம் நேற்று தொடங்கியது.
கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்தாண்டுக்கான கருப்பொருள், ‘காலநிலை மாற்றம் மற்றும் பூமித் தாய்க்கு ஏற்படும் சவால்கள்’.
இப்பிரசாரக் காலத்தில், பருவநிலை மாற்றத் தணிப்பு, துாய்மை மற்றும் கழிவு மேலாண்மை, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், நீடித்த நடைமுறைகளைப் பின்பற்றுதல், பசுமையான நிலையான ரயில்வே செயல்பாடுகளை ஊக்குவித்தல், மரம் நடுதல், நீர், ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
ரயில்வே ஊழியர்கள், பயணிகள், சாரணர், என்.சி.சி., குழுவினர், சமூகக் குழுக்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
பயணிகளுக்கு நீர்மோர்
வெப்பத்தை தணிக்கும் பொருட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பயணிகளுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. கோடை காலம் முடியும் வரை தினமும் 500 லிட்டர் மோர் பயணிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
