ADDED : ஜூன் 05, 2026 10:54 PM
மதுரை: மதுரையில் மாவட்ட வனக்கோட்டம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
நாகமலை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, பி. அம்மாப்பட்டி அரசுப் பள்ளி, உசிலம்பட்டி கிரீன்பார்க் பள்ளி, பேரையூர் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள், மரக்கன்று நடும் விழாக்கள் நடைபெற்றன.
சோழவந்தானில் ‘மரகத பொஞ்சோலை’ பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், ஆரோக்கிய வாழ்வியல் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன் தலைமையில் உச்சப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இயற்கை முகாம் நடந்தது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த ஓவியங்கள், போஸ்டர்கள் வடிவமைப்பு, பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மூலம் கலை பொருட்கள் உருவாக்கத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பாத்திமா கல்லுாரியில் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் 60 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ., தங்கபாண்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாத்திமா மேரி தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியை புவியா வரவேற்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பேராசிரியைகள் தமிழ்ச்செல்வி, அமுதா, சுபா, புவியா, ஆண்டிரியா, சகானா வர்ஷினி ஒருங்கிணைத்தனர்.
சென்ஸ் சுற்றுசூழல் தொண்டு மையம் சார்பில் கோமதிபுரம் சென்ஸ் வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைவர் பதி தலைமை வகித்தார். செயலர் கணேசன் வரவேற்றார். மாநகராட்சி பகுதிகளில் தினந்தோறும் குப்பையை அகற்றுதல், தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுற்றுசூழல் ஆர்வலர்கள் சாந்தி, இசக்கி, காயத்ரி பங்கேற்றனர். செல்லச்சாமி நன்றி கூறினார்.
சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமை வகித்தார். கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் குழந்தைவேல், தலைமை ஆசிரியர் நாராயணன் முன்னிலை வகித்தார். மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளியின் தேசிய பசுமைப்படை ஆசிரியர் சுந்தரேசன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் த.வெ.க.,மற்றும் வனம் நலம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நந்தகோபால் தலைமை வகித்தார். விவசாய அணி சாந்தகுமார், பேரூர் இணைச்செயலாளர் ஆண்டனி முன்னிலை வகித்தனர். ஆசிரியை கோமதி வரவேற்றார். சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மரங்களின் அவசியம் குறித்து வனம் நல இயக்க தன்னார்வலர்கள் ஈஸ்வரன், தங்கராஜ், கணேசன், கிருஷ்ணமூர்த்தி மாணவர்களுக்கு விளக்கி இனிப்பு வழங்கினர்.
உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே நாட்டாமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை தொண்டிமுத்து வரவேற்றார். மதுரை ரோட்டரி தமிழ்ச்சங்க நிர்வாகிகள் பாலகுரு, பிரேம், ஜெகன், உசிலம்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், சேகர், பெரியாறு வைகை பாசன சங்க நிர்வாகி ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் சிட்டிபாபு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கினார். ஆசிரியர் சத்யன் நன்றி கூறினார்.
