/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாழைக்கு வாழ்வளிக்கும் உழவர் உற்பத்தியாளர் குழு
/
வாழைக்கு வாழ்வளிக்கும் உழவர் உற்பத்தியாளர் குழு
ADDED : மே 06, 2024 06:10 AM

மேலுார் : சென்னகரம்பட்டியில் தண்ணீர் பற்றாக்குறையால் வாழை சாகுபடி செய்ய முடியாத நிலையில், உழவர் உற்பத்தியாளர் குழு குறைந்த தண்ணீரில் சொட்டு நீர் பாசனம் அமைத்து அதிக மகசூல் கிடைக்குமாறு விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது.
உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் சிதம்பரம் கூறியதாவது : சென்னகரம்பட்டி விவசாயி பாண்டி மற்றும் பல விவசாயிகளின் போர்வெல்லில் 16 நிமிடங்களே தண்ணீர் கொடுத்தது. அதனால் விவசாயிகள் வாழை சாகுபடி மேற்கொள்ள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர். எங்களது குழுவை தொடர்பு கொண்டனர். இதையடுத்து குறைந்த செலவில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுத்தோம். தற்போது 20 நிமிடத்தில் அனைத்து மரங்களுக்கும் தண்ணீர் போதுமானதாக உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமுள்ளதால் காலை, மாலை 2 வேளைகளுக்கும் தண்ணீரை பாய்ச்சும் அளவுக்கு தண்ணீர் உள்ளது.
சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தும் போது தண்ணீர், உரம், களையை கட்டுப்படுத்தும் செலவுகள் மிச்சமாகிறது. மரத்தில் வாடல் நோய் தாக்கியிருந்தால் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தும் போது பிற மரங்களுக்கு பரவுவதும் தடுக்கப்படுகிறது, பாத்தி (வரப்பு) முறையில் வாழைக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும். உரங்கள் வயல் முழுவதும், வேருக்கு கீழேயும் பரவுவதால் வாழைக்கு போதுமான உரம் கிடைக்காமல் போவதுடன், உரமும் வீணாகிறது. சொட்டு நீர் பாசனம் செல்லும் குழாயில் உரத்தை கலப்பதன் மூலம் வாழையின் வேருக்கு மட்டுமே போதுமான அளவில் கிடைக்கிறது.
இதனால் உரம் வீணாகாது. தண்ணீரும், உரமும் தேவையான நேரத்தில், அளவில் கிடைப்பதால் அதிக மகசூல் சாத்தியமாகிறது. இவ்வாறு அவர் கூறினார். இக்குழுவை 80984 24954 ல் பாராட்டலாம்.