/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாயிகளுக்கு உகந்த விதை சட்டங்கள் வேண்டும்
/
விவசாயிகளுக்கு உகந்த விதை சட்டங்கள் வேண்டும்
ADDED : ஜூலை 30, 2024 06:30 AM

மதுரை : விவசாயிகளுக்கு உகந்த விதை சட்டங்களை உருவாக்க வேண்டும் என பாரதிய கிசான் சங்க விவசாயிகள் மதுரையில் வலியுறுத்தினர்.
சங்க தேசிய துணைத்தலைவர் பெருமாள் கூறியதாவது:
ஒடிசா புவனேஸ்வரில் பாரதிய கிசான் சங்க அகில இந்திய நிர்வாகக் குழு கூட்டம் நடத்திய போது விதைச் சட்டத்தை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றினோம். விவசாயம் என்பது தொடர்ச்சியான செயல்முறை. நிலம், நீர், விதைகள் ஆகியவை தான் விவசாயத்தின் அடிப்படை கூறுகள். விதை இல்லாமல் விவசாயம் சாத்தியமற்றது.
1966 ம் ஆண்டு விதைச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. விவசாயிகளுக்குக் குறைவான சாதகத்துடன் நிறுவனத்துக்கு ஏற்ற புதிய விதை வரைவு 2004ல் கொண்டுவரப்பட்டது. எதிர்ப்பு காரணமாக சட்டத்தை உருவாக்க முடியாமல் 2019ல் மீண்டும் சட்டம் கொண்டு வர முயன்ற போது இதுவும் விவசாயிகளுக்கு உகந்ததாக இல்லை.
முறையான விதை சட்டம் இல்லாததால் விதைகள் என்ற பெயரில் போலியான அங்கீகாரம் இல்லாத தரமில்லாத விதைகள் சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
விதைகள் விஷயத்தில் விவசாயிகள் அதிகம் சுரண்டப்படுகின்றனர். விதை சுரண்டலை தடுக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக விதைச்சட்டம் கொண்டு வர வேண்டும். மலிவு விலையில் விதைகள் கிடைக்க வேண்டும். தவறான விதைகள் மற்றும் போலி விதைகளை வழங்கும் நிறுவனத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார்.