ADDED : ஜூலை 23, 2024 05:33 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி நிலையூர் பெரிய கண்மாய் நடுமடையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பாதையை மூடியதைக் கண்டித்து விவசாயிகள் கண்மாய் நடுமடையில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விவசாயிகள் கண்ணன், ராஜசேகரன், செல்வம் கூறியதாவது: வைகை அணையில் திறக்கப்படும்போது நிலையூர் பெரிய கண்மாய் நிரம்பும். இக்கண்மாய் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேற சின்னமடை, பெரியமடை, நடுமடை என 3 மடைகள் உள்ளன.
நடுமடையில் இருந்து வெளியேறும் தண்ணீர் 3 வாய்க்கால்கள் வழியாக கூத்தியார் குண்டு, கருவேலம்பட்டி, நிலையூர் பகுதி நிலங்களுக்கு செல்லும். வலது பக்க வாய்க்கால் பகுதியில் வண்டிப் பாதை அமைப்பதற்காக, கடந்தாண்டு நீர்வளத் துறையினர் கால்வாயை அடைத்து விட்டனர். இந்த வாய்க்கால் மூலம் பயனடையும் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நெற்பயிர்கள், வாழைப் பயிர்கள் கருகி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. அடைத்த நீர்வழிப் பாதையை திறந்து விட வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். வி.ஏ.ஓ. சேது கந்தவேல், 'இதுசம்பந்தமாக நாளை (இன்று) பேசி முடிவு எடுக்கப்படும்' என்றார். விவசாயிகள் கலைந்து சென்றனர்.