ADDED : மே 05, 2024 03:36 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமத்தில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக இரண்டு நெல் களங்கள் உள்ளன. அறுவடை செய்த நெற்கதிர்களை விவசாயிகள் அந்த களங்களில் கொண்டு வந்து சேமித்து விற்கின்றனர்.
வடிவேலன்: கூத்தியார்குண்டு கிராமத்திலிருந்து நிலையூர் வரை சில மாதங்களுக்கு முன்பு புதிதாக மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. ரோடு பணிகளுக்கான ஜல்லி, மணல் ஆகியவற்றை ஒரு நெல் களத்தில் கொட்டி எடுத்துச் சென்றனர். அதிக எடை கொண்ட லாரிகள் நெல் களத்தில் சென்று வந்ததால் நெல் களம் முழுவதும் சேதமுற்றது. சீரமைத்து கொடுப்பதாக ஒப்பந்ததாரர் தெரிவித்தார். இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெற் கதிர்களை 2 கி.மீ., துாரமுள்ள மற்றொரு களத்திற்கு கொண்டு செல்கின்றனர். பலர் வீடுகளின் முன்பு தார்ப்பாய்களில் கொட்டி வைத்து விற்கின்றனர். இதனால் ஒரு பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சேதமடைந்த நெல் களத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை என்றார்.