ADDED : ஜூலை 05, 2024 11:23 PM

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் கண்காணிப்பு கோபுர கட்டத்தில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை விமான நிலைய பகுதியில் ரூ. 20 கோடியில் ஆறு மாடிகள் கொண்ட புதிய கண்காணிப்பு கோபுர கட்டடப் பணிகள் நடக்கிறது. நேற்று மதியம் 2:30 மணிக்கு அக்கட்டடத்தின் தரை தளத்தில் திடீரென தீ எரிந்து புகை பரவியது. கட்டடத்தினுள் வேலை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர்கள் வெளியில் ஓடினர்.
புதிய கண்காணிப்பு கோபுர கட்டடத்தில் பொருத்துவதற்காக வைத்திருந்த மின்சாதன பொருட்கள் எரிந்து கருகின. புகை வெளியேறியதை கண்ட விமான நிலைய தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை உடனடியாக அணைத்தனர். உயிர்ச்சேதம் இல்லை.
கட்டடத்தினுள் தீயில் கருகி கிடந்த பொருட்களை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், விமான நிலைய அதிகாரிகள் பார்வையிட்டு விசாரித்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அவனியாபுரம் போலீசாரும் விசாரிக்கின்றனர்.