/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் பீதி
/
எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் பீதி
ADDED : மார் 02, 2025 04:12 AM
கொழும்பு : இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக பரவிய தகவலால் ஏராளமான மக்கள் எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பங்குகள் முன் குவிந்தனர்.
நம் அண்டை நாடான இலங்கையில் எரிபொருள் நிலையங்களுக்கான கமிஷன் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எரிபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தினர், புதிதாக இனி எரிபொருள் வாங்க மாட்டோம் என நேற்று முன் தினம் அறிவித்தனர்.
இதே போல் இலங்கையில் கடந்த 2022ல் பொருளாதார நெருக்கடியினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படப்போவதாக செய்தி பரவியது.
இதையடுத்து பீதியடைந்த மக்கள் ஏராளமானோர் பெட்ரோல் நிலையங்கள் முன் குவியத் துவங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் நிரப்பிச் சென்றனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசை கடுமையாக விமர்சித்தனர்.
நேற்று பார்லிமென்ட் துவங்கிய போது, துணை நிதி அமைச்சர் அனில் ஜெயந்தா பெர்னான்டோ பேசுகையில், “நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் நிலவவில்லை. போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. தொடர்ந்து விநியோகிக்கப்படும். மக்கள் பயத்தால் பெட்ரோல் நிலையம் குவிகின்றனர். அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என சில குழுக்கள் செயல்படுகின்றனர்,” என்றார்.