/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டக்குளத்திற்கு 'கட்டம்' சரியில்லை... கருவேலங் காட்டுக்குள் கண்மாய் கண்ணாமூச்சி காட்டும் காட்டுப்பன்றிகளால் பீதி
/
கட்டக்குளத்திற்கு 'கட்டம்' சரியில்லை... கருவேலங் காட்டுக்குள் கண்மாய் கண்ணாமூச்சி காட்டும் காட்டுப்பன்றிகளால் பீதி
கட்டக்குளத்திற்கு 'கட்டம்' சரியில்லை... கருவேலங் காட்டுக்குள் கண்மாய் கண்ணாமூச்சி காட்டும் காட்டுப்பன்றிகளால் பீதி
கட்டக்குளத்திற்கு 'கட்டம்' சரியில்லை... கருவேலங் காட்டுக்குள் கண்மாய் கண்ணாமூச்சி காட்டும் காட்டுப்பன்றிகளால் பீதி
ADDED : ஆக 05, 2024 06:00 AM

மதுரை: சோழவந்தான் அருகே கட்டக்குளம் கண்மாய் மண் மேடிட்டு கருவேலங்காடாக மாறியுள்ளதால் காட்டுப்பன்றிகள் நிரந்தரமாக குடியிருந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன.
கட்டக்குளம் பெரியகுளம் கண்மாய் 250 ஏக்கர் பரப்பளவில் 3 மடைகளுடன் உள்ளது. திருவாலவாயநல்லுார், நெடுங்குளம், ரிஷபம், ராயகுளம் கிராம மக்களின் தாய் கண்மாயாக உள்ளது. பெரியாறு பிரதான கால்வாய் மூலம் 1200 ஏக்கரில் ஒருபோக, இருபோக பாசனம் நடக்கிறது. இக்கண்மாயில் 15 அடி ஆழத்திற்கு வண்டல் மண் தேங்கியுள்ளதால் கண்மாய்க்கு வரும் நீர் அப்படியே வெளியேறுவதாக விவசாயிகள் பிரசன்ன கிருஷ்ணன், முகிலன், பார்த்தசாரதி தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: முல்லைப்பெரியாற்றின் தலைவாசலில் இந்த கண்மாய் இருந்தாலும் உள்ளே தண்ணீர் நிற்காமல் கால்வாய் போல மடைகளில் சென்று வீணாகிறது.
சிறுமலையில் இருந்தும் தண்ணீர் வரத்து கிடைக்கிறது. தெத்துார் மேட்டுப்பட்டியில் 10 ஏக்கர் பரப்பளவில் 200 மீட்டர் அகலத்தில் பட்டா ஓடைக்குள் கால்வாய் வருகிறது. நீர்வளத்துறை இந்த கால்வாயை சீரமைக்காததால் கண்மாய்க்கு வரவேண்டிய தண்ணீர் கிடைப்பதில்லை. உள்வரத்தில் இருந்து ராயபுரம் ரோடு வரை தண்ணீர் கொண்டு செல்ல வசதி செய்ய முடியும். இதற்கென தனியாக சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள ரோடு ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்றி சர்வீஸ் ரோடு அமைத்தால் திருவாலவாயநல்லுார், தேனுார் புதுக்குளம், ராயபுரம் கிராமங்கள் பயன்பெறும்.
45 ஆண்டுகளாக கண்மாய் துார்வாராததால் மண் அப்படியே தங்கி மேவியுள்ளது. உள்ளே சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் சிறுமலை அடிவாரத்தில் உள்ள காட்டுப்பன்றிகள் இங்கு நிரந்தரமாக குடியிருக்கின்றன. நாற்று நட்டு வைத்தாலும், வேறு செடி வைத்தாலும் கிழங்குகளை தோண்டி சேதப்படுத்துகின்றன. பகலில் குட்டிகளுடன் வயலுக்கு வரும் போது பயந்து ஒதுங்கி நிற்கிறோம். மலைபாம்புகளும் அவ்வப்போது வந்து செல்கின்றன.
ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்திற்கு கரை ரோடு மேடு, பள்ளமாக சகதியாக உள்ளதால் டூவீலர்களில் வயலுக்கு செல்ல முடியவில்லை. மழைக்காலத்தில் நெல் அறுவடைக்கு டிராக்டர்கள் வரமுடியாது. பல் சக்கரம் வைத்த டிராக்டருக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி அறுவடை செய்ய வேண்டும்.
டூவீலர்களும் செல்ல முடியாது என்பதால் வயலுக்கு தேவையான உர மூடைகளை தலையில் சுமந்து செல்கிறோம். கண்மாயில் மண் அள்ள அனுமதி தந்தால் கண்மாய் ஆழமாகி தண்ணீர் தேங்கி விடும். சீமை கருவேல மரங்களை அகற்றி வரத்து கால்வாயை சீரமைத்தால் நிரந்தரமாக பயன்பெறுவோம்.
இவ்வாறு கூறினர்.