/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிகிச்சையில் பெண் மரணம்டாக்டர் மீது நடவடிக்கை கோர முடியாது; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
சிகிச்சையில் பெண் மரணம்டாக்டர் மீது நடவடிக்கை கோர முடியாது; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சிகிச்சையில் பெண் மரணம்டாக்டர் மீது நடவடிக்கை கோர முடியாது; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சிகிச்சையில் பெண் மரணம்டாக்டர் மீது நடவடிக்கை கோர முடியாது; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஏப் 28, 2024 03:43 AM
மதுரை :  புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவனக்குறைவான பிரசவ சிகிச்சையால் பெண் இறந்ததாகவும் டாக்டர், நர்ஸ் மீது நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனு: எனது மனைவி கர்ப்பமுற்றார். பொன்னமராவதி அருகே ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் மயங்கி விழுந்தார். பின் பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.
மதுரை தனியார் மருத்துவமனைக்கு மனைவி மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, குணமடைந்தார். மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வரும் வழியில் மனைவி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையத்தின் சம்பந்தப்பட்ட டாக்டர், நர்ஸின் கவனக்குறைவான சிகிச்சையால் மனைவி இறந்தார். இருவர் மீது நடவடிக்கைகோரி தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.
அரசு தரப்பு: மனுதாரரின் குற்றச்சாட்டுகள் தவறனாவை. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு மனுதாரரின் மனைவிக்கு சுகாதார நிலைய டாக்டர் அறிவுறுத்தினார். அதை மனுதாரர் மறைத்துள்ளார். கடைசிவரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிரசவ சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக மரணம் நிகழ்ந்தது. மருத்துவக் குழுவின் தவறு எதுவும் இல்லை என விசாரணையில் உறுதியாகியுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: மனுதாரரின் மனைவியை அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்கு அனுப்புவதா என்பதில் குடும்பத்தில் மாறுபட்ட கருத்து ஏற்பட்டது. இறந்த பெண்ணை அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதில் அவரது சகோதரி தாமதம் செய்துள்ளார். இதனால் பொன்னான நேரத்தை இழக்க நேரிட்டது. இறுதியில் பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், நர்ஸ் கவனக்குறைவாக செயல்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பது பற்றிய கேள்வி எழும். எப்.ஐ.ஆர்.,எதுவும் பதிவு செய்யவில்லை. நேரடியான ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் டாக்டர், நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

