/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாலுகா அலுவலகம் அமைப்பதை விட 500 குடும்பங்கள் பயனடைவது முக்கியம் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
தாலுகா அலுவலகம் அமைப்பதை விட 500 குடும்பங்கள் பயனடைவது முக்கியம் உயர்நீதிமன்றம் உத்தரவு
தாலுகா அலுவலகம் அமைப்பதை விட 500 குடும்பங்கள் பயனடைவது முக்கியம் உயர்நீதிமன்றம் உத்தரவு
தாலுகா அலுவலகம் அமைப்பதை விட 500 குடும்பங்கள் பயனடைவது முக்கியம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 02, 2024 06:12 AM
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் புது தாலுகாவிற்கு அலுவலகம் அமைப்பதைவிட தெப்பம்பட்டி பட்டியல் சமூகத்தின் 500 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது முக்கியமானது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஒட்டன்சத்திரம் அருகே அமுதம் பள்ளத்தை சேர்ந்த செல்வகுமார் தாக்கல் செய்த மனு:
தெப்பம்பட்டியில் பட்டியலினத்தின் 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மோசமான நிலையில் வாழ்கின்றனர். இலவச வீட்டுமனை பட்டா கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்தனர். ஒதுக்கீட்டிற்காக குறிப்பிட்ட சர்வே எண்ணி லுள்ள நிலம் 2012ல் அடையாளம் காணப்பட்டது. நிலம் நத்தமாக வகை மாற்றம் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பும் அம்மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது.
கள்ளிமந்தையம் புதிய தாலுகாவிற்கு அலுவலகம் அமைக்க ஒரு சர்வே எண்ணிற்குட்பட்ட நிலம் தேவைப்படுவதாக ஒட்டன்சத்திரம் தாசில்தார் 2022 ல் உத்தரவிட்டார். அதை ரத்து செய்து பட்டியல் சமூகத்தை சேர்ந்த நிலமற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: ஒட்டன்சத்திரம் தாலுகாவை பிரித்து கள்ளிமந்தையம் புது தாலுகா உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது என்பதுதான் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளின் நிலைப்பாடு. பட்டியல் சமூகத்தினருக்கு மாற்று இடத்தில் வீட்டு மனைகள் ஒதுக்கப்படும் என்பதும் அவர்களின் நிலைப்பாடு.
தற்போதுவரை ஒட்டன் சத்திரம் தாலுகா பிரிக்கப்படவில்லை என்பது உண்மை. கள்ளிமந்தையம் தாலுகா இன்னும் உருவாகவில்லை. புது தாலுகா அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பணியை கைவிட வேண்டுமா என்பது பரிசீலிக்க வேண்டிய கேள்வி. மக்கள் கண்ணியத்துடன் வாழ அரசியல் சாசனம் வழிவகுத்துள்ளது.
நிலத்தை முறையாக வரையறுத்து இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது மட்டுமே எஞ்சியிருந்தது. தாலுகா அலுவலகம் அமைக்க நிலம் தேவை என்ற காரணத்தை கூறி, முன்பு துவங்கிய பணி நிறுத்தப்பட்டது.
பழம்பெரும் வழக்கறிஞர் நானி பால்கிவாலா,'எங்களிடம் அரசு ஊழியர்கள் உள்ளனர்; ஆனால் பொது சேவை இல்லை,' என்றார். மக்களின் கோரிக்கைகளை அவர்களின் நிலையிலிருந்து நிறைவேற்றும் வகையில் அதிகாரிகள் பணியை மேற்கொள்ள வேண்டும். அதுதான் காலனித்துவ ஆட்சிக்கும், குடியாட்சிக்கும் உள்ள வேறுபாடு. 'மக்களால் மற்றும் மக்களுக்காக,' என ஆபிரகாம் லிங்கன் கூறியது சாதாரணமானது அல்ல. பிரச்னையை முழுமையாக ஆராய்ந்து பரிசீலித்திருந்தால், அடையாளம் காணப்பட்ட இடத்தில் தாலுகா அலுவலகம் அமைப்பதைவிட 500 குடும்பங்கள் பயன்பெறுவது மிக முக்கியமானது என்ற முடிவிற்கு அதிகாரிகள் வந்திருப்பர்.
நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பயனாளிகளை கண்டறிந்து ஒதுக்கப்பட்ட இடத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்களை 3 மாதங்களில் வழங்க தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.