/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் தெப்பக்குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன; உயர்நீதிமன்றம்
/
கோயில் தெப்பக்குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன; உயர்நீதிமன்றம்
கோயில் தெப்பக்குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன; உயர்நீதிமன்றம்
கோயில் தெப்பக்குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன; உயர்நீதிமன்றம்
ADDED : செப் 05, 2024 04:56 AM

மதுரை: தமிழக கோயில்களிலுள்ள தெப்பக்குளங்களை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்திய மருத்துவ நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜெயவெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்திய மதச் சடங்குகளில் தண்ணீருக்கு முக்கியப்பங்கு உண்டு. அதன் விளைவாக பல வழிபாட்டுத்தலங்களில் தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கோயிலுக்குள் நுழையும் முன் அங்குள்ள தெப்பக்குளங்களில் கை, கால்களை கழுவ வேண்டும்.
கோயிலிலுள்ள கடவுளுக்கு சடங்கு ஸ்நானம் செய்ய அந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.
கோயில்களிலுள்ள குளங்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கின்றன. மண் அரிமானத்தை குறைக்கின்றன. பல நோய்களை குணப்படுத்துவதால் சில யாத்ரீகர்கள் தெப்பக்குளத்தில் குளிக்கின்றனர்.
பல கோயில்களில் தெப்பக்குளங்களைச் சுற்றிலும் வேலி அமைக்காமல் பராமரிப்பின்றி உள்ளன. பெயர் பலகை, சுற்றுச்சுவர் இல்லை. சுற்றிலும் மலர்ச்செடிகள் இல்லை. குப்பை, கழிவுநீர் தேங்கியுள்ளன. இதனால் பக்தர்கள் கோயில் கருவறைக்குள் நுழைவதற்கு முன் கால்களை கழுவ தெப்பக்குளம் செல்லத் தயங்குகின்றனர்.
அங்குள்ள படிகளில் மன அமைதிக்கு ஓய்வெடுக்க விரும்புவதில்லை.
தென்மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி தண்டாயுதபாணிசுவாமி கோயில், லட்சுமிபுரம் கலியுக சிதம்பரேஸ்வரர் கோயில், சிவகங்கை மாவட்டம் சூரக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயில், சிங்கம்புணரி சேவுகமூர்த்தி அய்யனார் கோயில், ராமநாதபுரம் மாவட்டம் ஆறுமுககோட்டை செங்கமடை கோட்டை கருப்பண சுவாமி கோயில், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் உட்பட 27 கோயில்களிலுள்ள தெப்பக்குளங்களில் பெயர் பலகை, நீர் வடிகால் மற்றும் நீர் சேமிப்பு வசதி இல்லை. தடுப்புச்சுவர்கள் சேதமடைந்துள்ளன.
கோயில்களின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும். பக்தர்களுக்கு இயற்கையான, துாய்மையான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை அறநிலையத்துறைக்கு உள்ளது. தென்மாவட்ட 27 கோயில்களின் தெப்பக்குளங்களை துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோயில்களிலுள்ள தெப்பக்குளங்களை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை கமிஷனர் அக்., 1ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.