உயர்நீதிமன்றம் நிபந்தனை: மண் கடத்தல் வழக்கில் ஜாமின்: கனிம அறக்கட்டளைக்கு ரூ.30 ஆயிரம்
உயர்நீதிமன்றம் நிபந்தனை: மண் கடத்தல் வழக்கில் ஜாமின்: கனிம அறக்கட்டளைக்கு ரூ.30 ஆயிரம்
ADDED : மே 21, 2024 06:45 AM
மதுரை : கொட்டாம்பட்டியில் சட்டவிரோதமாக கரம்பை மண் திருட்டில் ஈடுபட்ட 2 பேருக்கு ஜாமின் அனுமதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கனிமவள அறக்கட்டளைக்கு ரூ.30 ஆயிரம் செலுத்த நிபந்தனை விதித்தது.
அனுமதியின்றி சட்டவிரோதமாக லாரியில் கரம்பை மண்ணை கடத்தியதாக ராஜேஷ், மாதவன் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான 2 பேரும் ஜாமின் மனுதாக்கல் செய்தனர்.
நீதிபதி பி.வடமலை விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: சம்பவத்திற்கும், மனுதாரர்களுக்கும் தொடர்பில்லை.
அரசு தரப்பு: நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மற்ற 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அனுமதியின்றி 3 யூனிட் கரம்பை மண் லாரி, மண் அள்ளும் இயந்திரம் மூலம் கடத்தப்பட்டது.
அவை மீட்கப்பட்டுள்ளன. ஜாமின் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: சூழ்நிலை கருதி ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மேலுார் நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும்.
மறு உத்தரவு வரும்வரை போலீசில் ஆஜராக வேண்டும். மனுதாரர்கள் திரும்பப் பெற முடியாத தலா ரூ.15 ஆயிரத்தை கலெக்டர் தலைமையிலான மாவட்ட கனிமவள அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
