ADDED : ஜூன் 17, 2026 06:51 PM
மதுரை: மதுரை ரிங்ரோடு பாண்டி முனீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம், நிலை மாலைக்கு நுாறு ரூபாய் கட்டணம் வசூலித்த பின்பே தரிசனத்திற்கு அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
பாரதிய ஹிந்து எழுச்சி இயக்க தலைவர் மேகராஜ் பாண்டியன் கூறியதாவது: மதுரையில் பாண்டி முனீஸ்வரர் கோயில் நிர்வாகம் சிறப்பு தரிசனம் என்று தனியாக வசூலிக்கின்றனர். தற்போது பொது தரிசனத்தில் நிலைமாலை கொண்டு செல்லும் பக்தர்களிடம், நுாறு ரூபாய் வசூலிக்கின்றனர்.
கோவில்களுக்கு வருவோர் மனநிம்மதிக்காக வருகின்றனர். ஆனால் கோவில் நிர்வாகமோ அவர்கள் நிர்ணயிப்பது தான் கட்டணம் என்கின்ற முறையில் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்துகிறது. தென்மாவட்ட பக்தர்கள் அதிகம் குவியும் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலில், இது போன்று வசூல் செய்யும் நிர்வாகம் மீது ஹிந்து அறநிலையத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
