அடிப்படை வசதிகள் கேட்டு ஜே.ஜே., நகர் மக்கள் மறியல்
அடிப்படை வசதிகள் கேட்டு ஜே.ஜே., நகர் மக்கள் மறியல்
ADDED : மே 29, 2026 10:54 PM
மதுரை: மதுரை மாநகராட்சி 100வது வார்டாக அவனியாபுரம் ஜே.ஜே., நகர் பகுதி உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனக்கூறி நேற்று அப்பகுதியினர் மதுரை சர்வதேச விமான நிலையம் செல்லும் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
அப்பகுதியினர் கூறியதாவது: ஜே.ஜே., நகர் பகுதியில் 30 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு, ஜே.ஜே.நகர்., மெயின் ரோட்டில் மட்டும் தார் ரோடு அமைத்தனர். தற்போது பாதாள சாக்கடை பணிக்காக ரோட்டை தோண்டி பாதியில் நிறுத்தி விட்டனர்.
இப்பகுதி ரோடெங்கும் குண்டும், குழியுமாக உள்ளதால் பாதசாரிகள் நடப்பதற்கே சிரமப்படுகின்றனர். அரை மணி நேரம் மழை பெய்தாலே ரோடு முழுவதும் வெள்ளம் சூழ்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மின்ஒயர்களும் தாழ்வாக செல்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர் என அனைவரிடமும் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சிக்கு வரி செலுத்தியும், அடிப்படை வசதியின்றி தவிக்கிறோம் என்றனர்.
