/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொதுத் தேர்வு பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்; இணை இயக்குநர் பேச்சு
/
பொதுத் தேர்வு பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்; இணை இயக்குநர் பேச்சு
பொதுத் தேர்வு பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்; இணை இயக்குநர் பேச்சு
பொதுத் தேர்வு பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்; இணை இயக்குநர் பேச்சு
ADDED : மார் 01, 2025 04:21 AM

மதுரை : பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபடுவோர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மதுரை மாவட்ட தேர்வு அலுவலரான தனியார் பள்ளி இணை இயக்குநர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.
மார்ச் 3ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. இதையொட்டி தேர்வுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சி.இ.ஓ., ரேணுகா தலைமையில் நடந்தது. டி.இ.ஓ.,க்கள் அசோக்குமார், இந்திரா, சுதாகர், தேர்வுத் துறை உதவி இயக்குநர் பிரதீபா, மாநகராட்சி சி.இ.ஓ., ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆஞ்சலோ இருதயசாமி பேசியதாவது: பொதுத் தேர்வுப் பணிகளை ஆசிரியர்கள், அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள உறுதியேற்க வேண்டும். தேர்வின்போது ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வுகாணும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். முந்தைய காலங்களை போல் எவ்வித சர்ச்சைகளுக்கும் இந்தாண்டு இடம் அளிக்கக்கூடாது.
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். முதன்முறையாக 'எமர்ஜென்ஸி கவர்' ஒவ்வொரு அறையிலும் வழங்கப்படும்.
மாணவர்களின் முகப்பு தாளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அந்த கவரில் உள்ள மாற்று முகப்பு தாளை பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையின்றி அந்த கவரை பிரிக்க வேண்டாம். ஆப்சென்ட் மாணவர்கள் விபரங்கள் உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார்.
மாவட்டத்தில் 109 மையங்களுக்கான முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் காப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
118 பறக்கும் படை
பிளஸ் 2 தேர்விற்காக மதுரை மத்திய சிறையில் ஒன்று உட்பட 109 தேர்வு மையங்களில் 323 பள்ளிகளை சேர்ந்த 37,457 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வை கண்காணிக்க சி.இ.ஓ., உட்பட 8 அதிகாரிகள், 110 ஆசிரியர்கள் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 200 ஸ்கிரைப் மாணவர்களுக்கு பாடம் வாரியாக ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.