/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தோப்பூரில் பசுமை தோட்டமான 'காட்டாஸ்பத்திரி' ; நோயாளிகளுக்கு ஏற்ற சுற்றுச்சூழல்
/
தோப்பூரில் பசுமை தோட்டமான 'காட்டாஸ்பத்திரி' ; நோயாளிகளுக்கு ஏற்ற சுற்றுச்சூழல்
தோப்பூரில் பசுமை தோட்டமான 'காட்டாஸ்பத்திரி' ; நோயாளிகளுக்கு ஏற்ற சுற்றுச்சூழல்
தோப்பூரில் பசுமை தோட்டமான 'காட்டாஸ்பத்திரி' ; நோயாளிகளுக்கு ஏற்ற சுற்றுச்சூழல்
ADDED : மே 13, 2024 06:34 AM

மதுரை: பத்து ஆண்டுகளுக்கு முன் போதுமான கட்டுமான வசதிகள், ஊழியர்கள் இல்லாமல் இருந்ததால் 'காட்டு ஆஸ்பத்திரி'என்று அழைக்கப்பட்ட தொற்று நோய்களுக்கான அரசு சிறப்பு மருத்துமனை இன்று மரங்கள், தோட்டங்கள் என பசுமையாக காட்சி தருகிறது.
மதுரை தோப்பூரில் இருக்கும் இம் மருத்துவமனை 200 ஊழியர்கள், 9 வார்டுகளைக் கொண்டுள்ளது. மாசுபடாத இயற்கையான காற்று, சுத்தமான சுற்றுச்சூழல், எங்கு பார்த்தாலும் மரம், தோட்டம் என காண்போர் உள்ளத்தை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த தொற்று நோயாளிகள் இங்கே வரவழைக்கப்பட்டு, இயற்கைச் சூழலில் இனிய மருத்துவ சேவை அளிக்கிறது இம் மருத்துவமனை.
இது குறித்து செவிலியர் கிருஷ்ணபாரதி கூறியதாவது: பத்தாண்டுகளுக்கு முன் போதிய கட்டட வசதி இன்றி இருந்த மருத்துவமனை இன்று பல மாற்றங்களை பெற்றுள்ளது. நகருக்குள் உள்ள பெரிய மருத்துவமனைகளை நாடுவோர்கூட இங்கே சிகிச்சை பெற வருகின்றனர்.
சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அமைதியான, பசுமைச் சூழலில் சிகிச்சை பெறவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். காசநோய், காலரா, அம்மை, வயிற்றுப்போக்கு நோயாளிகளை தங்க வைத்து நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை தரப்படும். தேவையான உணவு வழங்குவோம். நோய் தொற்று காற்றில் பரவக்கூடியது. மரங்கள் இருந்தால் காற்று துாய்மையாகும். எனவே டாக்டர்கள், செவிலியர்கள் பெயரிலேயே மரக்கன்றுகள் இங்கு நடுகிறோம். இதனால் சுற்றுச்சூழல் சுத்தமாக உள்ளது.
இதுபோக புற்றுநோயின் இறுதி கட்டத்தில் உள்ள நோயாளிகள், இறுதி காலத்தில் இங்கு இயற்கையோடு இணைந்து தங்கள் கடைசி நாட்களை கழிப்பதுண்டு. இங்கு நோயாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், பாட்டுக் கச்சேரி, நடனம், திரைப்படம் என பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது என்றார்.