/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தள்ளுமுள்ளு
/
மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தள்ளுமுள்ளு
ADDED : ஜூலை 02, 2024 06:17 AM

மதுரை : மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை நீதிமன்றத்தின் முன் வழக்கறிஞர்கள் சங்கம் உண்ணாவிரதம் இருந்த நிலையில், ஆஜராகச் சென்ற பா.ஜ., வழக்கறிஞர்களை சில வழக்கறிஞர்கள் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதிய சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் முன் மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்குமார் பங்கேற்றார்.
பா.ஜ., வழக்கறிஞர்கள் காலை 10:35 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக சென்றனர். அவர்களை நீதிமன்ற வளாக அண்ணாதுரை சிலை அருகே சில வழக்கறிஞர்கள் தடுத்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மோகன்குமார் கூறியதாவது: அண்ணாதுரை சிலை அருகே சில வழக்கறிஞர்கள் 'பாரத்மாதா கீ ஜெ' என கோஷமிட்டனர். அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே உண்ணாவிரதம் இருந்தோம். இருதரப்பிலும் எங்கள் நிர்வாகிகள் சமரசம் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜராகச் சென்ற வழக்கறிஞர்களை எங்கள் சங்கத்தினர் யாரும் தடுக்கவில்லை.
பா.ஜ.,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அய்யப்பராஜா கூறியதாவது:
வழக்கம் போல் நீதிமன்றத்திற்கு சென்றபோது எங்களை சில வழக்கறிஞர்கள் தடுத்தனர். அவர்களிடம், 'சட்டத்திற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுபோல் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்' என்றோம். அவர்கள் பா.ஜ., ஒழிக்க என கோஷமிட்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாங்கள் யாருக்கு எதிராகவும் கோஷமிடவில்லை. இவ்வாறு கூறினர்.