/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காமராஜ் பல்கலையில் இளநிலை படிப்புகள் நிறுத்தம் விண்ணப்பித்த மாணவர்கள் அதிர்ச்சி
/
மதுரை காமராஜ் பல்கலையில் இளநிலை படிப்புகள் நிறுத்தம் விண்ணப்பித்த மாணவர்கள் அதிர்ச்சி
மதுரை காமராஜ் பல்கலையில் இளநிலை படிப்புகள் நிறுத்தம் விண்ணப்பித்த மாணவர்கள் அதிர்ச்சி
மதுரை காமராஜ் பல்கலையில் இளநிலை படிப்புகள் நிறுத்தம் விண்ணப்பித்த மாணவர்கள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 09, 2024 08:33 PM
மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் நேரடி இளங்கலை படிப்புகள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் யு.ஜி., படிப்புகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பல்கலையில் பி.எஸ்.சி., கணிதம், உளவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.வோக்., ஆகிய ஏழு நேரடி யு.ஜி., படிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அப்போதிருந்த துணைவேந்தர் குமார் முயற்சியால் துவங்கப்பட்டது.
அப்போதே 'யு.ஜி., படிப்புகளுக்கான ஆசிரியர்கள், வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் இல்லை. ஏற்கனவே பல்கலையில் நிதிச்சுமை உள்ளதால் இது மேலும் நிதிப்பிரச்னையை ஏற்படுத்தும்.
'எனவே பல்கலையில் நேரடி யு.ஜி., படிப்புகளை துவக்க வேண்டாம். ஆராய்ச்சி உள்ளிட்ட விஷயங்களில் பல்கலை கவனம் செலுத்த வேண்டும்' என, செனட், கல்வி பேரவை கூட்டங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எதிர்ப்பை மீறி வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு, கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் கூடுதலாக நியமிக்கப்பட்டு இப்படிப்புகள் நடத்தப்பட்டன.
துணைவேந்தர் குமார் ராஜினாமா செய்து விட்டார். தற்போது பல்கலையை வழிநடத்த கல்லுாரி கல்வி இயக்குனர் கார்மேகம் தலைமையில் கன்வீனர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
யு.ஜி., படிப்புகளுக்கு இந்தாண்டு 1,000த்திற்கும் மேற்பட்டோர் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் 'சேர்க்கை எப்போது நடக்கும், முதலாமாண்டு வகுப்புகள் எப்போது துவங்கும்' என காத்திருந்த நிலையில், யு.ஜி., முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை எவ்வித அறிவிப்பும் இன்றி பல்கலை நிறுத்தம் செய்துள்ளது.
பேராசிரியர்கள் கூறியதாவது:
தற்போது யு.ஜி., இரண்டு, மூன்றாமாண்டு நேரடி படிப்புகள் மட்டும் நடக்கின்றன. வருவாய் இல்லை என்பதால் முதலாமாண்டு சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது தான்.
ஆனால், இந்தாண்டு ஏழு யு.ஜி., படிப்புகளுக்கு, 1,642 மாணவர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் முதலாமாண்டு சேர்க்கை நிறுத்தம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சிண்டிகேட், செனட், கல்வி பேரவை உள்ளிட்ட அமைப்புகளில் கூட இதற்கு ஒப்புதல் ஏதும் பெறவில்லை.
பல்கலையில் விண்ணப்பித்த மாணவர்கள் மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள பல்கலை கல்லுாரியில் சேர்க்கையாகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இடவசதி அங்கு கேள்விக்குறியாகி உள்ளது.
வேறு கல்லுாரிகளில் சேர வேண்டும் என்றால் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பெரும்பாலான கல்லுாரிகளில் முடிந்து விட்டது. இதனால் மாணவர்கள், அவர்கள் பெற்றோர் மனஉளைச்சலில் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.