/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தன்னுள் இருக்கும் கடவுளை மனிதன் உணர வேண்டும்
/
தன்னுள் இருக்கும் கடவுளை மனிதன் உணர வேண்டும்
ADDED : பிப் 26, 2025 05:49 AM
மதுரை: தன்னுள் இருக்கும் கடவுளை மனிதன் உணர வேண்டும் என சுவாமி சிவயோகானந்தா பேசினார்.
மதுரை எஸ்.எஸ்.காலனி தாம்பிராஸ் திருமண மண்டபத்தில் திருமந்திரம் தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசியது.
திருமந்திரம் முதலாம் தந்திரத்தில் திருமூலர் உபதேசங்களாக முப்பது பாடல்களை அந்தாதித் தொகையில் இயற்றியுள்ளார். அழியாத இறைத் தன்மையாகிய சிவமே மனிதனின் இயல்பாகும். மனிதன் தனது அறியாமையினால் தன்னுள் இருக்கும் கடவுளை அறியாது இருக்கின்றான். ஆழ்மனதில் பதிந்திருக்கும் வினைத் தளைகளை நீக்கும் வழியினைக் காட்டுபவரே குரு.அதனால் மனிதன் தன்னுள் இருக்கும் ஒப்பற்ற சிவானந்தத்தை உணர்கின்றான். இதனையே திருமூலர் 'உள்நின்று உருக்கி ஒர் ஓப்பில்லா ஆனந்தக் கண்ணின்று காட்டி களிம்பறுத்தான்' என உபதேசிக்கின்றார்.
பயிரிட்டவர்கள் பயிர்களுக்கு வேலியும் அமைத்து, அதைக் காவல் காப்பது போல குருவானவர் தனது சீடர்களுக்கு உபதேசம் என்னும் வேலியை அமைத்து கடவுள் அருளையும் உணர்த்தி காக்கின்றார்,
திருமூலர் மனிதனின் மனதை பளிங்கு போன்ற ஸ்படிகக் கல்லாகவும், சிவமாகிய கடவுளை செம்பவள மணியாகாவும் குறிப்பிடுகின்றார். ஸ்படிகக் கல் தான் சார்ந்துள்ள நிறத்தினை ஏற்கும் இயல்புடையது . உலகைச் சாரும்போது உலகியல்புகளையும், சிவனைச் சாரும் போது சிவத்தின் இயல்பினையும் அடைகின்றது. குருவானவர் சிவத்தின் இயல்பை உபதேசித்து நம் மனதில் சிவத்தன்மையை பதிப்பதை திருமூலர் அழகாக 'பளிங்கில் பவளம் பதித்தான் பதியே' எனப் பாடுகிறார். இவ்வாறு பேசினார்.
இச் சொற்பொழிவு மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறும்.

