/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துப்பாக்கியால் சுட்டதாக புகார் மருது சேனை தலைவர் கைது
/
துப்பாக்கியால் சுட்டதாக புகார் மருது சேனை தலைவர் கைது
துப்பாக்கியால் சுட்டதாக புகார் மருது சேனை தலைவர் கைது
துப்பாக்கியால் சுட்டதாக புகார் மருது சேனை தலைவர் கைது
ADDED : மார் 22, 2024 05:05 AM
திருமங்கலம்: மருது சேனை தலைவர் ஆதிநாராயணன் மீது பெட்ரோல் குண்டு வீசி துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி நடந்த வழக்கில் தங்களை நோக்கி ஆதிநாராயணன் , அவரது கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆதிநாராயணன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரைமாவட்டம் கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் 52. இவர் மருது சேனை என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில்மார்ச் 14 ல் கள்ளிக்குடி அலுவலகத்தில் இருந்து மையிட்டான்பட்டியில் உள்ள வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.
திருமங்கலம் விருதுநகர் நான்கு வழி சாலையில் இருந்து மையிட்டான்பட்டிக்கு திரும்ப முயன்ற போது எதிர்த்து திசையில் காரில் வந்த ஒரு கும்பல் ஆதிநாராயணன் சென்ற கார் மீது மோதியது.
நால்வர் கைது
மேலும் காரில் இருந்தவர்கள் பெட்ரோல் குண்டை ஆதிநாராயணன் கார் மீது வீசி உள்ளனர். இதில் குண்டு காரின் அருகே பக்கவாட்டில் பட்டு வெடித்தது. இதை அடுத்து ஆதிநாராயணனின் கார் டிரைவர் காரை வேகமாக காட்டுப்பகுதிக்குள் ஓட்டிச் சென்றதால், எதிர் தரப்பினர் வீசிய மற்றொரு குண்டு வெடிப்பதற்கு முன் கீழே விழுந்தது. இதையடுத்து ஆதிநாராயணன் கொடுத்த புகாரில் பெட்ரோல் குண்டு வீசி, துப்பாக்கியால் சுட்டு தன்னை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் திருமங்கலம் பகத்சிங் தெரு சிவபிரகாஷ் 23, விருதுநகர் முகமது தவ்பிக் 26, சுபாஷ் சந்திர போஸ் 28, கள்ளிக்குடி கார்த்திக் 26, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாக்குமூலம்
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கொடுத்த வாக்கு மூலத்தில் தாங்கள் பெட்ரோல் குண்டு வீசியபோது ஆதிநாராயணன் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதனால் தான் இரண்டாவது பெட்ரோல் குண்டு வெடிப்பதற்கு முன்பே கைதவறி கீழே விழுந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் நேற்று ஆதிநாராயணன் 52, நவீன் குமார், சேதுபதி, பழனி குமார், லட்சுமண பெருமாள், சுபையா கான் ஆகிய ஆறு பேரை கைது செய்து திருமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சண்முகராஜ் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி குண்டுகளின் காலியான மூன்று குப்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் ஆதிநாராயணனை விடுதலை செய்யக்கோரி ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

