ADDED : ஜூலை 31, 2024 05:08 AM

மதுரை : தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனை, தத்தனேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனை, உசிலம்பட்டி ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மருத்துவக் கல்லுாரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை மாநில முன்னாள் பொருளாளர் தங்கவேலு துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பெரோஷ்கான், அரசு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்க மாநிலத்துணைத்தலைவர் பரமசிவன், அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ், நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர் சங்க மாநிலத்தலைவர் பஞ்சவர்ணம், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மண்டல செயலாளர் முத்துவேல் கலந்து கொண்டனர்.
மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநிலத்துணைத்தலைவர் நீதிராஜா பேசியதாவது:
அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, இணை இயக்குநர் அலுவலகங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளருக்கான 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. கண்காணிப்பாளர் பணியிடம் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஜூன் 27 ல் தீர்ப்பு வந்த பின்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. தாமதமின்றி அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றார். மாவட்டத்துணைத்தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.

