/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாயத்தின் அடுத்த தொழில்நுட்பம் ‛அக்ரிகார்ட்' வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல்
/
விவசாயத்தின் அடுத்த தொழில்நுட்பம் ‛அக்ரிகார்ட்' வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல்
விவசாயத்தின் அடுத்த தொழில்நுட்பம் ‛அக்ரிகார்ட்' வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல்
விவசாயத்தின் அடுத்த தொழில்நுட்பம் ‛அக்ரிகார்ட்' வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல்
ADDED : அக் 17, 2024 09:31 PM
மதுரை:“வேளாண் விளைபொருட்களை வீடு தேடி கொண்டு வரும் வகையில் ‛அக்ரிகார்ட்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது,” என, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி மதுரையில் தெரிவித்தார்.
மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மதுரை விவசாய கல்லுாரி சார்பில் அறிவியல் தமிழில் வேளாண்மை என்ற தலைப்பில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் டீன் காஞ்சனா வரவேற்றார்.
விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். டீன் மகேந்திரன், பேராசிரியர்கள் வெள்ளைச்சாமி, மரகதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இணைப்பேராசிரியர் மணிமாறன் நன்றி கூறினார்.
துணைவேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:
கடந்தாண்டு நெல்லில் 2 ரகம், தோட்டக்கலையில் 10 உட்பட 24 ரகங்களை வேளாண் பல்கலையில் வெளியிட்டுள்ளோம்.
தமிழகத்தில் 45 முதல் 50 சதவீத பகுதியில் பல்கலையின் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. 80 சதவீத நிலத்தில் பல்கலையின் தொழில்நுட்பத்தை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். அரசின் மண்ணுயிர் காப்போம், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டங்களுக்கு பல்கலை உறுதுணையாக இருப்பதன் மூலம் 25 ஆயிரம் எக்டேர் தரிசு நிலம் சாகுபடி பரப்பாக மாறியுள்ளது.
‛ரிமோட் சென்சிங்', செயற்கைக்கோள் நுண்ணறிவு திறன் மூலம் எந்த பயிர்கள், என்ன நிலையில் உள்ளது, என்பதை கண்காணிக்கிறோம். பல்கலையின் மாணவர்கள் 105 பேர் ‛ட்ரோன்' தொழில்நுட்ப பயிற்சி, லைசென்ஸ் பெற்று ‛ட்ரோன்' தொழில்முனைவோராகி உள்ளனர்.
தமிழகத்தில் 8 லட்சம் விவசாயிகளுக்கு அலைபேசி செயலி வழியாக விவசாய ஆலோசனை, தொழில்நுட்பம் வழங்குகிறோம். வேளாண் விளைபொருட்களை வீடு தேடி கொண்டு வரும் வகையில் ‛அக்ரிகார்ட்' செயலி உருவாக்கியுள்ளோம்.
இந்த செயலியில் பதிவு செய்தால் போதும். உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொருட்களையும் இச்செயலி மூலம் இணைக்கும் திட்டம் உள்ளது. விவசாயிகளின் இப்போதுள்ள சராசரி வயது 50. இளைஞர்கள் விவசாயத்திற்கு வருவது குறைந்துள்ளதால் இயந்திரமயமாக்கல் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். எனவே அதற்கான ஆராய்ச்சியில் பல்கலை ஈடுபட்டுள்ளது. விளைச்சலை அதிகப்படுத்துவதோடு மதிப்பு கூட்டுதல் பற்றியும் யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.