ADDED : ஆக 07, 2024 05:25 AM
விருதுநகர் : காரியாபட்டி மேலகள்ளங்குளத்தில் அமைய உள்ள ஸ்டெல்லர் டிஸ்டிலரீஸ் என்ற நிறுவனம் பற்றி மக்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.
இதன் மூத்த அலுவலர் கூறியதாவது: காரியாபட்டி மேலகள்ளங்குளத்தில் 18 ஏக்கர் பரப்பில் 100 கிலோ லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து பெட்ரோலுடன் கலந்து வாகனங்களின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று மத்திய, தமிழக அரசின் எத்தனால் உற்பத்தி கொள்கை அடிப்படையில் அமைய உள்ளது. மக்காசோளம், பயன்படுத்த முடியாத உடைந்த அரிசி போன்றவைதான் எத்தனால் உற்பத்தி செய்ய மூலப்பொருட்கள்.
இந்த ஆலையில் இருந்து வெளி வரும் திடக்கழிவு மாட்டுத்தீவனம், கோழித்தீவனத்திற்கு பயன்பட உள்ளது. கழிவுநீர் முற்றிலும் மறு சுழற்சி செய்யப்பட்டு ஆலையிலேயே மீண்டும் உபயோகப்பட உள்ளது.
இதனால் நிலத்திற்கோ, வளிமண்டலத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
தமிழகத்தில் இது போன்று 6 ஆலைகள் அமைய உள்ளன. இந்நிலையில் ஸ்டெல்லர் டிஸ்டிலரீஸ் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது ஜூலை 22ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த ஆலை அமைவதன் மூலம் சுற்றுப்புற கிராம இளைஞர்களுக்கு நல்ல வேலைவாயப்பு அமையும். மக்காசோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் நல்ல நிரந்தர விலையை பெற்று பயன்பெறுவர் என தெரிவித்தார்.