காலியிடங்கள் அதிகரிப்பால் மனஉளைச்சலில் செவிலியர்கள்
காலியிடங்கள் அதிகரிப்பால் மனஉளைச்சலில் செவிலியர்கள்
ADDED : மே 14, 2024 06:27 AM
மதுரை : 'காலியிடங்கள் அதிகரிப்பால் வேலைப்பளு அதிகரித்துள்ளது. எனவே புதிய நியமனங்களை உடனே செய்ய வேண்டும்' என தமிழக நகராட்சி, மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் போல, நகராட்சி, மாநகராட்சிகளிலும் சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். மகப்பேறு உதவி, கர்ப்பிணிகளை கண்டறிந்து அவர்களை கண்காணித்து பராமரிப்பது உட்பட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் 5 ஆயிரம் பேருக்கு ஒருவர் என 2 ஆயிரத்திற்கு மேல் இருந்த செவிலியர்கள், தற்போது 15 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்று 500 பேர் உள்ளனர்.
மக்கள் தொகைக்கு ஏற்ப நியமிக்காததால் வேலைப்பளு அதிகரித்து நகர்ப்புற செவிலியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். ஏற்கனவே 'பிக்மி 2.0' என்ற சாப்ட்வேரில் களப்பணியை பதிவு செய்வர். தற்போது புதிதாக 'பிக்மி 3.0' என்ற சாப்ட்வேர் அறிமுகமாகியுள்ளது. இதில் கர்ப்பிணிகளின் போட்டோ மற்றும் விவரங்களை 50 கிலோ பைட்டுக்கு குறைத்து பதிவேற்றினால்தான் அவர்களுக்கு பிக்மி நம்பர் வழங்க முடியும்.
நகர்ப்புற செவிலியர்கள் 30 ஆண்டுகளாக பதவி உயர்வையே பார்க்க முடியவில்லை. அதேசமயம் கிராம செவிலியர்கள் 2வது பதவி உயர்வுக்கு தயாராக உள்ளனர். ஒரே பணியில் உள்ளவர்களுக்கு ஏன் இந்த வேறுபாடான நிலை என கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி நகர சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் பஞ்சவர்ணம் கூறுகையில்,
''25 ஆண்டுகளாக பணிநியமனமே இல்லை. செவிலியர்கள் குறைவால் பணிப்பளு அதிகரித்துள்ளது. புதிய செயலியை பயன்படுத்துவதால் நாள் முழுவதும் கணினி பயன்பாட்டிலேயே நேரம் செலவாகிறது. வீடுகள்தோறும் சென்று கர்ப்பிணிகளை கணக்கெடுப்பது, பராமரிக்கும் பணிகளில் ஈடுபட முடியவில்லை. அரசு இதற்கு தீர்வு காண வேண்டும்'' என்றார்.
