/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கை அகற்றப்பட்ட மாணவருக்கு 'கை' கொடுத்த அலுவலர்கள்
/
கை அகற்றப்பட்ட மாணவருக்கு 'கை' கொடுத்த அலுவலர்கள்
ADDED : செப் 04, 2024 06:52 AM
மதுரை : பள்ளியில் விளையாடும்போது கையில் முறிவு ஏற்பட்டு இடது கை அகற்றப்பட்ட மாணவருக்கு உடனடியாக செயற்கை கை வழங்க மதுரை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
பரவை மாணவன் அழகுவசந்த் 14. ஒன்பதாம் வகுப்பு மாணவர். பள்ளியில் விளையாடும்போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனை சிகிச்சைக்குபின், நாட்டு வைத்தியம் செய்தனர். மூன்றாவது நாள் கையில் கொப்புளங்கள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சில நாட்களில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. கையில் நீர்கோர்த்து புண்ணானதால் 4 முறை மீண்டும் மீண்டும் ஆப்பரேஷன் நடந்தது.
இறுதியில் கை துண்டிக்கப்பட்டது. தாய் பாண்டிச்செல்வி மகனுக்கு உதவி கேட்டு கலெக்டர் அலுவலக குறைதீர் நாளில் மனு கொடுத்தார். அவருக்கு செயற்கை கை பொருத்த கலெக்டர் சங்கீதா நடவடிக்கை மேற்கொண்டார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டு அலுவலர் வெங்கடசுப்ரமணியன் அவருக்கு உடனே அடையாள அட்டை வழங்கினர். முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கை பொருத்த திட்ட அலுவலர் அருண் உடனே பதிவு மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் கூறுகையில், ''செயற்கை கை வழங்க 'எண்டோலைட்' நிறுவனம் மூலம் அளவு எடுக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் மதிப்பிலான செயற்கை கை இன்னும் ஒரு மாதத்திற்குள் தயாராகி பொருத்தப்படும்'' என்றனர்.