/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழு விதிமீறிபணிநிறைவு சான்றுகள் வழங்கிய விவகாரம் நகராட்சி நிர்வாக இயக்குநர் விசாரணைக்கு பின் பீதி
/
மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழு விதிமீறிபணிநிறைவு சான்றுகள் வழங்கிய விவகாரம் நகராட்சி நிர்வாக இயக்குநர் விசாரணைக்கு பின் பீதி
மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழு விதிமீறிபணிநிறைவு சான்றுகள் வழங்கிய விவகாரம் நகராட்சி நிர்வாக இயக்குநர் விசாரணைக்கு பின் பீதி
மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழு விதிமீறிபணிநிறைவு சான்றுகள் வழங்கிய விவகாரம் நகராட்சி நிர்வாக இயக்குநர் விசாரணைக்கு பின் பீதி
ADDED : மே 04, 2024 05:32 AM
மதுரை: மதுரையில் மாநகராட்சி நகரமைப்பு குழு சார்பில் விதிமீறி தனியார் கட்டடங்களுக்கு 'பணிநிறைவு சான்று' (கம்பிளிஷன் சர்ட்டிபிகேட்) வழங்கப்பட்டதா என நகராட்சி நிர்வாக இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டது பீதியை கிளப்பியுள்ளது.
மாநகராட்சி எல்லைக்குள் 2 ஆயிரம் சதுர அடி வரை கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கு மாநகராட்சியும், அதற்கு மேற்பட்ட சதுர அடிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழுமத்திடமும் வரைபட அனுமதி பெற வேண்டும். இதன் பின் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் (சி.டி.பி.ஓ.,) உத்தரவின்பேரில் அந்தந்த உதவிப் பொறியாளர்கள் பணிநிறைவு சான்றுகளை வழங்குவர்.
இதன் பின்னரே மின் இணைப்பு உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கு பெற முடியும்.
ஆனால் மதுரையில் இந்த பணிநிறைவு சான்றிதழ்களை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியாமல் நகரமைப்பு குழு சார்பில் தனியார் கட்டடங்களுக்கு அளிக்கப்பட்டதாக ஆதாரங்களுடன் புகார்கள் அளிக்கப்பட்டன.
நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜ் மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது: விதிமீறல் கட்டடங்களுக்கு இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் வழியாக தான் பணிநிறைவு சான்று அளிக்கப்பட்டது.
ஆனால் ஆளும்கட்சி நிர்வாகிகள் உதவியுடன் நகரமைப்பு குழுவில் உள்ள சிலர் 100 வார்டுகளிலும் ரூ. கோடி கணக்கில் முறையற்ற வகையில் வசூலித்துள்ளனர். நகரமைப்பு குழு தன்னிச்சையாக மின்வாரியத்திற்கு பரிந்துரைத்த கடிதங்கள் குறித்து, மாநகராட்சி கவனத்திற்கு மின்வாரியம் கொண்டு வந்த பின் தான் இந்த விவகாரமே வெளியே தெரிந்தது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் குழுத் தலைவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. எத்தனை விதிமீறல் கட்டடங்களுக்கு இதுபோல் நகரமைப்பு குழு தன்னிச்சையாக பணிநிறைவு சான்றுகள் வழங்கியுள்ளது என்பது குறித்து மாநகராட்சி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலும் விதிமீறி பணிநிறைவு சான்று அளித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும்.
தேர்தல் நன்னடத்தை விதி முடிவுக்கு வந்த பின் நடக்கும் முதல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இவ்விவகாரத்தை கிளப்ப முடிவு செய்துள்ளோம் என்றனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கமிஷனர் தினேஷ்குமார் பொறுப்பேற்றதற்கு முன் இவ்விவகாரம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரனிடம் நகராட்சி நிர்வாக இயக்குநர் விசாரணை நடத்தி விட்டார். குழு தலைவரும் உரிய விளக்கம் அளித்துள்ளார்.
மீண்டும் இதுபோல் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
பணிநிறைவு சான்று குறித்த புகார்கள் அதிகாரிகளால் பெயரளவில் விசாரித்து முடிக்கப்பட்டாலும், அ.தி.மு.க., தரப்பு இவ்விவகாரத்தை கிளப்ப தயாராக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குழு, ஆளும்கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.