ADDED : ஆக 02, 2024 04:59 AM

மேலுார்: பெரியாற்று கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள நா. கோவில்பட்டிக்கு செல்லும் பாலம் சிதிலமடைந்துள்ளதால் கிராம மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
மேலுார் ஒரு போக பாசன பகுதிக்கு கள்ளந்திரி - குறிச்சிப்பட்டி வரை 12 வது பெரியாறு பிரதான கால்வாய் செல்கிறது.
இதில் நாவினிப்பட்டி ஊராட்சி நா.கோவில்பட்டி மற்றும் அழகுநாதபுரம் பகுதியில் வசிக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்து செல்ல 30 ஆண்டுகளுக்கு முன் தடுப்புச் சுவருடன் கூடிய பாலம் அமைத்தனர். இப் பாலம் சிதிலமடைந்துவிட்டது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: தடுப்புச் சுவர் உடைந்ததால் பள்ளி, ஆம்புலன்ஸ் வேன் வாகனங்களின் ஒரு சக்கரம் தரையில் படாமல், அந்தரத்தில் பாலத்தை கடந்து செல்கிறது.
இதனால் டூ வீலர் மற்றும் நடந்து செல்வோர் அச்சத்துடனே செல்கிறோம். தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரம் பாலத்தை கடக்கும்போது வாகனங்கள் கால்வாயினுள் விழுந்து உள்ளன.
அதனால் உயிர்பலி ஏற்படும் முன் பாலத்தை சீரமைப்பதோடு, தடுப்புச் சுவர் கட்டவலியுறுத்தி பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.
ஊராட்சி தலைவி தவுலத்பீவி கூறுகையில், ''பாலத்தை பராமரிக்கவும், தடுப்புச் சுவர் கட்டவும் நீர்வளத்துறையிடம் மனு கொடுத்துள்ளோம், விரைவில் கட்டப்படும் என்றார்.