ADDED : ஆக 15, 2024 05:24 AM

திருமங்கலம் : கள்ளிக்குடி ஒன்றியம் வேப்பங்குளம் மருதுாரில் அய்யனார் கோயில் உள்ளது. இங்கு ஆரம்பத்தில் பெட்டி மட்டும் வைத்து வழிபட்டனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு கோபுரம் அமைத்து வழிபடுகின்றனர்.
கோயிலுக்கு பட்டா வாங்க கள்ளிக்குடி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் கோயில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாகவும், தங்கள் வீடுகளுக்குச் செல்ல வழியின்றி உள்ளதாகவும், இதனால் கோயிலை அப்புறப்படுத்த வேண்டுமென அதே பகுதியைச் சேர்ந்த இருவர் வழக்கு தொடுத்தனர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விசாரணையில் கோயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று டி.எஸ்.பி.,க்கள் ராமலிங்கம், அருள், தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் கோயிலை இடிக்க முயன்றதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெண்கள் பலர் கோயிலுக்குள் அமர்ந்து பூட்டிக் கொண்டனர். இதையடுத்து கோயிலை இடிக்க வந்த இயந்திர ஆபரேட்டர்கள் தயங்கினர். 4 மணி நேரம் அதிகாரிகள் முயற்சி செய்து, மதியம் வேறு இயந்திரம் வரவழைக்கப்பட்டது.
ஆண்கள், பெண்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் பலரும் கோயில் மேல் ஏறி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து அப்புறபடுத்திய போலீசார், கோயில் உள்ளே இருந்த பெண்களையும் மீட்டனர். அதைதொடர்ந்து கோயில் இடிக்கப்பட்டது.