ADDED : ஜூன் 03, 2024 03:20 AM
மதுரை: மதுரை அரசரடியில் 'மதுரை டிஸ்ட்ரிக்ட் ஹோமிங் பீஜியன் சொசைட்டி' சார்பில் நடந்த புறா விடும் போட்டியில் வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
சொசைட்டி செயலாளர் அப்துல் காதர் தலைமை வகித்தார். தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். போட்டியில் 946 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியனாக அப்துல் காதர் வெற்றி பெற்றார். அவருக்கு சொசைட்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
இதுகுறித்து பொருளாளர் விஜய் கூறியதாவது: புறாக்களில் பல வகைகள் உள்ளன. அதில் 'ஹோமர்' புறாக்கள் எங்கிருந்து விடுகிறோமோ அதே இடத்திற்கு மீண்டும் வந்துவிடும். குறைந்தபட்சம் 50 கி.மீ., முதல் அதிகபட்சம் 1500 கி.மீ., வரை புறா விடும் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தற்போது புதுடில்லி வரையும்கூட விடப்படுகிறது. நாடு முழுவதும் இதற்கான கிளப்கள் உள்ளன.
மதுரையில் எங்களுடைய கிளப் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு முதல்முறையாக போட்டிகளை நடத்தியுள்ளோம். குறிப்பிட்ட கி.மீ.,க்கு ஏற்ப பாடலுார் (150 கி.மீ.,), விழுப்புரம் (250 கி.மீ.,), செங்கல்பட்டு (350 கி.மீ.,), தடா (450 கி.மீ.,), கூடுர் (500 கி.மீ.,), மடலா (750 கி.மீ.,), கரீம்நகர் (1000 கி.மீ.,) என இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன என்றார். வழக்கறிஞர் செந்தில் குமார், துணைத் தலைவர் ஈஸ்வரன், துணைச் செயலாளர் இம்மிபாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.