
மதுக்கடை ஊழியர்களை வெட்டி கொள்ளை: 4 பேர் கைது
திருமங்கலம்: சொரிக்காம்பட்டி டாஸ்மாக் கடை ஊழியர்கள் பரமேஸ்வரன், ராமசாமி ஏப்.,28 இரவு கடையை அடைத்துவிட்டு கிளம்பினர். அப்போது வந்த சிலர் மதுபாட்டில் கேட்டனர். தர மறுத்த அவர்களை வெட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்தனர். கடை பூட்டை உடைத்து 100 மதுபாட்டில்களையும் கொள்ளையடித்தனர். இவ்வழக்கில் மதுரை சூர்யா நகர் இயேசு கவிபாலன் 19, கருமாத்துார் அபி பிரகாஷ் 20, புலித்தேவன்பட்டி காரல்மார்க்ஸ் 24, கோட்டையூர் ஒத்த வீடு முனீஸ்வரன் என்ற ரமணா 18, ஆகியோரை செக்கானுாரணி இன்ஸ்பெக்டர் திலகராணி கைது செய்தார்.
பெண் டாக்டரை கொல்ல முயற்சி
மதுரை: பிரபல தனியார் மருத்துவமனையின் 28 வயது பெண் டாக்டர், முதுகலை மருத்துவம் படிக்கிறார். இவரது சக மாணவரான டாக்டர் பிரசித்குமார் 27, தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து கல்லுாரி நிர்வாகம் விசாரித்து வரும் நிலையில் பெண் டாக்டரை கொல்ல முயற்சித்ததாக மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஒருவர் கைது
மேலுார்: கீழவளவில் வெள்ளையத்தேவன் மற்றும் மகேஷ் தலைமையில் இரு தரப்பினர் கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். ஏப்.,21 ல் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் மகேஷ் தரப்பை சேர்ந்த நவீன் என்பவருக்கு இரண்டு விரல்கள் துண்டானது. இவ் வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைதான நிலையில் நேற்று போலீசார் மேலுார் தேவகுமாரை 25, கைது செய்தனர்.
கொத்தனார் கொலை
மதுரை: தெப்பக்குளம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் கொத்தனார் முத்துமாரி 50. நேற்றுமுன்தினம் வீட்டில்தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார். மனைவி செல்வி வெளியே சென்றிருந்தார். அருகில் ரத்தக்கறையுடன் கட்டை இருந்தது. விசாரணையில் தலையில் அடித்து கொலை செய்தது தெரிந்தது. கொலையாளி யார், காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவர் கொலையில் சக மாணவர் கைது
மேலுார்: கத்தப்பட்டி உருது பள்ளியில் பீஹார் மாணவர்கள் 11 பேர் தங்கி படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 வயது மாணவன் மாயமானார். போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்.ஐ., முத்துக்குமார், போலீஸ்காரர் அழகு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 13 வயது சக மாணவன், கழிவறையில் 10 வயது மாணவனை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு கழிவு நீர் தொட்டிக்குள் போடுவது பதிவாகி இருந்தது. அவரை கைது செய்தனர். தனது அம்மா குறித்து தவறாக பேசியதால் கொலை செய்தது தெரிந்தது.
முன்னாள் ஊராட்சி தலைவர் பலி
திருநகர்: சாக்கிலிப்பட்டி மூக்கையா 65. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். நேற்று மதியம் திருநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பினார். அப்போது பின்னால் வந்த லாரி மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் கண்ணாடி உடைத்து தீ வைப்பு
மேலுார்: அரசு டவுன் பஸ் நேற்று முன்தினம் இரவு புலிப்பட்டியில் இருந்து புறப்பட்டது. செட்டியார்பட்டி பிரிவில் முகத்தை மூடிக்கொண்ட நால்வர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பஸ் மீது தாக்குதல் நடத்தினர். இருக்கைக்கு தீ வைத்தனர். பயணிகள் தப்பி ஓடினர். டிரைவர் மந்தையன், கண்டக்டர் சின்னையன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலை கிடைக்காததால் தற்கொலை
மதுரை: தெப்பக்குளம் புதுராமநாதபுரம் ரோடு நாசர் ஹூசேன் 24. பி.காம்., பட்டதாரியான இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. வேலை இல்லாததால் மனஅழுத்தம் ஏற்பட்டு விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.