
மூவர் மீது கந்துவட்டி வழக்கு
மதுரை: கோரிப்பாளையம் முத்துலட்சுமி 37. அப்பகுதி புவனேஸ்வரியிடம் கடன் வாங்கி தினமும் வட்டி செலுத்தி வந்தார். சில நாட்களாக வட்டி செலுத்தாத நிலையில் வட்டியுடன் கடனை திரும்ப கேட்டு முத்துலட்சுமி, கணவர் செந்தில்குமார் ஆகியோரை தாக்கியதாக புவனேஸ்வரி மகன் ஹரிஹரன் 24, உட்பட மூவர் மீது கந்துவட்டி சட்டத்தின்கீழ் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் புவனேஸ்வரி மகள் புகாரில் முத்துலட்சுமி, செந்தில்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மூதாட்டி பலி
கொட்டாம்பட்டி: சென்னை சதீஷ்குமார் 45, தனியார் நிறுவன மேலாளர். துாத்துக்குடியில் உள்ள மனைவி வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு காரில் திரும்பினார். காரை சதீஷ்குமார் ஓட்டினார். மனைவி நந்தினி 40, மாமியார் விஜயலட்சுமி 72, மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் வந்தனர். கொட்டாம்பட்டி அய்யாபட்டி விலக்கருகே கார் நிலைத் தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் விஜயலட்சுமி இறந்தார். மற்றவர்கள் காயத்துடன் தப்பினர். எஸ்.ஐ., அண்ணாத்துரை விசாரிக்கிறார்.
ரூ.19.50 லட்சம் கொள்ளையடித்தவர்கள் கைது
வாடிப்பட்டி: திருச்சி வடக்கு காட்டூர் நிர்மல் கண்ணன் 31. அடகு நகைகளை வாங்கி வியாபாரம் செய்கிறார். மே 20 நண்பர்கள் சிவா, பிரபாகரனுடன் காரில் 300 பவுன் அடகு நகைகளை வாங்க திண்டுக்கல் வந்தார். வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி ரோட்டிற்கு அழைத்து வந்த ஒரு கும்பல் ரூ.19.50 லட்சத்தை பறித்து சென்றனர். இதுதொடர்பாக பொட்டுலுபட்டி தினேஷ்குமார் 23, ராமராஜபுரம் ஆனந்த் 25, அர்ஜூனன் 25, ஆகியோரை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
விவசாயிக்கு கத்திக்குத்து
மேலுார்: வேப்படப்பு அம்பேத்காருக்கும் 43, அதே ஊரை சேர்ந்த ஆண்டிச்சாமிக்கும் 45, பூமிதான நிலத்தை உழுவது தொடர்பாக பிரச்னை இருந்தது. நேற்று காலை ஆண்டிச்சாமி, செல்வராணி 25, பாரத் உள்ளிட்ட 15 பேர் அம்பேத்கார் வீட்டிற்குள் புகுந்து கத்தி, கட்டை மற்றும் கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயம்பட்ட அம்பேத்கார் மற்றும் அவரது உறவினர்கள் சிகிச்சை பெறுகின்றனர். மேலுார் எஸ்.ஐ., ரமேஷ்பாபு விசாரிக்கிறார்.
---பேரன் தள்ளியதில் பாட்டி பலி
வாடிப்பட்டி: கச்சைகட்டி பெரியார் நகரைச் சேர்ந்தவர் வள்ளியம்மை 84. மகள் வெள்ளைத்தாய், 15 வயது பேரனுடன் வசித்து வந்தார். ஏழாம் வகுப்பு வரை படித்த பேரன், கூலி வேலைக்கு செல்கிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து ரூ.1500 பணத்தை எடுத்ததாக சிறுவனிடம் வள்ளியம்மை கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பேரன் தள்ளிவிட்டதில் பாட்டி வள்ளியம்மை அருகே இருந்த கல்லில் விழுந்து தலைக்காயமடைந்து இறந்தார். வாடிப்பட்டி போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.