
'நாப்கின்' எரித்த போது விபரீதம்
மதுரை: திருப்பாலை கிருஷ்ணாநகர் முருகேசன் மனைவி கிருஷ்ணவேணி 31. நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் பாத்ரூமில் 'நாப்கினை' எரித்தபோது கிருஷ்ணவேணி உடையில் தீப்பற்றியது. அலறல் சத்தத்தை கேட்டு முருகேசன் கதவை உடைத்து கிருஷ்ணவேணியை மீட்டார். தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணவேணி சிகிச்சை பெறுகிறார். திருப்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
அரசு வேலை மோசடி
மதுரை: வில்லாபுரம் அன்புநகர் லிங்கேஸ்குமார் 32. இவருக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறிமுகமான மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு ராஜா, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதை நம்பி ரூ.3.25 லட்சம் கொடுத்த லிங்கேஸ்குமாருக்கு, ஆரம்ப சுகாதார நிலைய அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையை ராஜா வழங்கினார். பணியில் சேர சென்றபோது அது போலியானது எனத்தெரிந்தது. பணத்தை திருப்பிக்கேட்டபோது ரூ.40 ஆயிரம் மட்டும் தந்த ராஜா, மீதி ரூ.2.85 லட்சம் தராமல் மோசடி செய்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்றவர்கள் கைது
கொட்டாம்பட்டி: எஸ்.ஐ., முகமது சல்மான், போலீசார் விஜய் ஆகியோர் வலைச்சேரி பட்டியில் ரோந்து சென்ற போது வேனில் புகையிலை கொண்டு வந்த நத்தம் மீனாட்சிபுரம் முத்துக்குமார் 30, விற்பனை செய்த பள்ளபட்டி அலிஸ் 35, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 202 கிலோ புகையிலை மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.