தீ வைத்தவர் கைது
மதுரை: விஸ்வநாதபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு உள்ளது. இதன் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பறிமுதல் டூவீலர்களுக்கு மர்மநபர் தீ வைத்தார். மதுபோதையில் தீ வைத்ததாக செல்லுார் மலைச்சாமியை 34, போலீசார் கைது செய்தனர்.
'மதயானை' கைது
மேலுார்: சண்முகநாதபுரம் சின்னையா 41. கட்டட ஒப்பந்ததாரர். மேலுார் முத்தமிழ் நகரில் கட்டட வேலைக்காக வைத்திருந்த 25 ஜாக்கி, மோல்டு உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. இதுதொடர்பாக கருத்தபுளியம்பட்டி மதயானையை 22, எஸ்.ஐ., ரமேஷ்பாபு கைது செய்தார்.
இருவர் பலி
கொட்டாம்பட்டி: கண்டுகபட்டியை சேர்ந்தவர்கள் சுவாமியப்பன் 45, வீரமணி 38, விவசாய கூலித்தொழிலாளிகள். இருவரும் சிங்கம்புணரிக்கு டூ வீலரில் சென்றனர். ஹெல்மெட் அணியவில்லை. வீரமணி டூ வீலரை ஓட்டினார். கொடுக்கம்பட்டி அருகே டூ வீலர் மீது டிராக்டர் மோதியதில் இருவரும் இறந்தனர். கொட்டாம்பட்டி எஸ்.ஐ., செல்வகுமார் விசாரிக்கிறார்.
கோயிலில் திருட்டு
திருமங்கலம்: ராஜபாளையம் ரோடு வேங்கட சமுத்திரத்தில் ஆனந்த ரூபன் ஐயப்பன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த சி.சி.டி.வி., இணைப்பை துண்டித்து விட்டு உண்டியலில் இருந்த ரூ. 20 ஆயிரம் , பூஜைப் பொருள்களை திருடிச் சென்றார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.