
புகையிலை கடத்தியோர் கைது
வாடிப்பட்டி: எஸ்.ஐ., மாயாண்டி தலைமையில் போலீசார் முத்துக்கிருஷ்ணன், நாகராஜ், சுந்தரபாண்டி, தனசேகரன் நான்கு வழிச்சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த சிவகங்கை திருப்புவனம் ராஜகோபால் 29, வேல்முருகன் 38, சதீஷ்குமாரை 34, கைது செய்தனர். காருடன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்றவர் கைது
வாடிப்பட்டி: சமயநல்லுார் எஸ்.ஐ., தியாகராஜன் தலைமையில் போலீசார் கார்த்திக் ராஜா, ராதாகிருஷ்ணன் நேற்று காலை பரவை கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற பரவை தங்கராஜ் 64, கைதுசெய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
-அதிக மாத்திரை எடுத்த கர்ப்பிணி இறப்பு
வாடிப்பட்டி: செக்கானுாரணி உரப்பனுார் ரமேஷ் திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது மகள் ஷிவானி 23, நான்கு மாதங்களுக்கு முன் வடபழஞ்சி சஞ்சய் 26, என்பவரை காதல் திருமணம் செய்தார். மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள ஷிவானி மே 11ல் கணவருடன் கருத்து வேறுபாடால் வீட்டில் இருந்த 'ரத்த அழுத்த' மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு வாந்தி எடுத்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி ஷிவானி நேற்று முன்தினம் இறந்தார். சஞ்சய் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடிவீரன், சீலா, லட்சுமி மீது வழக்குப்பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.
மது பாட்டில்கள் திருட்டு
திருமங்கலம்: திருமங்கலம் மதுரை ரோட்டில் மின்வாரிய பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் கடை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்த கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள 77 மது பாட்டில்களை திருடி சென்றனர். பெட்டிகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் அதிர்ஷ்டவசமாக தப்பியது. மேற்பார்வையாளர் ரவி புகாரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.