
கொத்தனார் கொலையில் தொழிலாளி கைது
மதுரை: தெப்பக்குளம் மீனாட்சிநகர் கொத்தனார் முத்துமாரி 50. மே 25ம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், அப்பகுதி சங்கிலி 47, கொலை செய்தது தெரிந்தது. சம்பவத்தன்று காலை போதையில் சங்கிலியின் தாயார் குறித்து முத்துமாரி அவதுாறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சங்கிலி, மதியம் முத்துமாரி வீட்டிற்கு சென்று துாங்கிக்கொண்டிருந்தவரை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். துாத்துக்குடியில் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கமிஷன் தராததால் கொலை
கள்ளிக்குடி: பாறைகுளம் குருசாமி 58. கப்பலுார் மீனாட்சி நகர் பகுதியில் தனது புதிய வீட்டை விற்க புரோக்கர் கப்பலுார் மாயவரதனை 39, அணுகினார். ஒருவர் வாங்க சம்மதம் தெரிவித்தார். அவரிடம் மாயவரதனுக்கு கமிஷன் கொடுக்காமல் குருசாமி விற்றார். இதையறிந்த மாயவரதன், நண்பர் செல்லபாண்டியுடன் 31, குருசாமி வீட்டிற்கு சென்றார். வாக்குவாதம் செய்து தள்ளிவிட்டதில் கீழே விழுந்த குருசாமி இறந்தார். இருவரும் கைது செய்யப்பட்டனர். குருசாமியின் மகன், மருமகன் ராணுவவீரர்களாக உள்ளனர்.
இருவர் கைது
மேலுார்: வேப்படப்பு அம்பேத்காருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆண்டிச்சாமி தரப்பினருக்கும் பூமிதான நிலத்தை உழுவது தொடர்பான முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் ஆண்டிச்சாமி தரப்பினர் ஆயுதங்களால் தாக்கியதில் காயமுற்ற அம்பேத்கார் சிகிச்சையில் உள்ளார். இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, எஸ்.ஐ.,க்கள் முத்துக்குமார், ரமேஷ்பாபு ஆகியோர் வேப்படப்பு கவிமணி 24, திருவாதவூர் செல்வமணியை 29, கைது செய்தனர்.