படிக்கட்டில் தொங்கிய மாணவர் காயம்
திருமங்கலம்: சாத்தங்குடியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கனகுபாண்டி நேற்று முன்தினம் காலை துாம்பகுளத்தில் இருந்து திருமங்கலத்திற்கு டவுன் பஸ்சை ஓட்டி வந்தார். அரசபட்டி பஸ் ஸ்டாப்பில் பஸ்சில் ஏறிய மாணவர்கள் படியில், ஜன்னலில் தொங்கியபடி வந்துள்ளனர். டிரைவர் கனகு பாண்டி, கண்டக்டர் அருண் பாண்டி அவர்களை உள்ளே வரும்படி கூறினர். மாணவர்கள் உள்ளே வரவில்லை.
சங்கையா கோவில் அருகே வந்தபோது பிளஸ்1 படிக்கும் 17 வயது மாணவன் பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த மாணவரோடு வந்த பிறமாணவர்கள் டிரைவரை அசிங்கமாக பேசி தாக்கியுள்ளனர். இதில் பஸ்சில் இருந்த 2 மாணவிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. டிரைவர் கனகுபாண்டி புகாரில் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல ஒரு மாணவன் கொடுத்த புகாரின் பேரில் பஸ்சை அஜாக்கிரதையாக ஓட்டியதாக டிரைவர் கனகுபாண்டி, கண்டக்டர் அருண் பாண்டியன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கணவர் கொலை: மனைவி கைது
மேலுார்: கருத்தபுளிம்பட்டி செந்தில்குமார் 45, இவரது மனைவி கோகிலா 34. கட்டட தொழிலாளர்கள். திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். செந்தில்குமார் வேலைக்கு செல்லாமல் மதுபோதையில் தினமும் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். ஆத்திரமடைந்த கோகிலா நேற்று முன்தினம் இரவு கணவனின் தலையில் கல்லை துாக்கி போட்டுக் கொலை செய்தார். டி.எஸ்.பி., ப்ரீத்தி, தனிப்பிரிவு போலீசார் முத்துக்குமார், போலீஸ்காரர் தினேஷ்குமார் கோகிலாவை கைது செய்தனர்.
-விபத்தில் கிளீனர் பலி
உசிலம்பட்டி: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து மதுரைக்கு நேற்று அதிகாலை காய்கறி ஏற்றிய லோடு வேனை டிரைவர் சையது காதர் ஷாகிப் 42, ஓட்டி வந்தார். அனுமந்தன்பட்டி செந்தில்குமார் 48, கிளீனராக வந்தார். உசிலம்பட்டி குஞ்சாம்பட்டி அருகே காலை 4:00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ரோட்டோர புளியமரத்தில் வேன் மோதியது. இதில் செந்தில்குமார் பலியானார். டிரைவர் சையது காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் பறிமுதல்
மதுரை: கே.புதுார் போலீஸ் ஸ்டேஷன் ஆய்வாளர் புலிக்குட்டி அய்யனார், எஸ்.எஸ்.ஐ., சீனிவாசகம், ஏட்டு சரவணக்குமார் ஆகியோர் புதுார் பகுதியில் ரோந்து சென்றனர். சிட்கோ வளாகம் பகுதியில் அனாதையாக நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். காரின் டிக்கியில் இருந்த சாக்குப்பையில் தடை செய்த புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. காரையும் புகையிலை பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----- கிணற்றில் விழுந்தவர் பலி
எழுமலை: சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாய தொழிலாளி சிங்கராஜா 25. இவர் ஊருக்கு அருகில் உள்ள தோட்டத்தில் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்ததில் பலியானார். தீயணைப்பு வீரர்கள் பிரேதத்தை மீட்டனர். எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.