
தங்கையை கொலை- செய்த அண்ணன்
மதுரை: மதுரை கீரைத்துறை மேலத்தோப்பைச் சேர்ந்தவர் திலகவதி, 36. இவரது கணவர் கண்ணன் ராணுவத்தில் பணிபுரிகிறார். இரண்டு மகன்கள் உள்ளனர். திலகவதிக்கு திருமணமான ஒருவருடன் தவறான தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவரது சகோதரரான ஆட்டோ ஓட்டுநர் அங்கமுத்து என்ற தமிழ்ராஜ், 42, தங்கையை கண்டித்துள்ளார்.
இருப்பினும் அவர் தவறான தொடர்பில் இருந்துள்ளார். கோபமடைந்த தமிழ்ராஜ், தங்கையுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆத்திரம் தலைக்கேறிய தமிழ்ராஜ், தங்கை திலகவதியின் கழுத்தை நெறித்தும், தலையை சுவரில் இடித்தும் கொலை செய்து தப்பினார். தலைமறைவான தமிழ்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
--புதுப்பெண் தற்கொலை
திருமங்கலம்: மம்சாபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் மகள் சுந்தர பிரியா 22, இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு செப்.8ல் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மிரட்டி பணம் பறித்தவர் கைது
திருமங்கலம்: எலியார்பத்தி டோல்கேட்டில் நேற்று முன்தினம் இரவு என்.கல்லுப்பட்டி டிரைவர் பால்பாண்டி லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துள்ளார். அதிகாலையில் லாரியில் ஏறிய ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பால்பாண்டியிடம் ரூ. 2 ஆயிரத்து 500 பறித்துச் சென்றார். தனது லாரியில் இருந்த சி.சி.டி.வி., காட்சியின் அடிப்படையில் கூடக்கோவில் போலீசில் பால்பாண்டி புகார் அளித்தார். விசாரணையில் எஸ்.வெள்ளாகுளம் ஜெயபாலன் 37, என்பவர் மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது. ஜெயபாலன் மீது இதே போல் மதுரை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.