ADDED : செப் 02, 2024 06:17 AM

விபத்தில் பலி
பேரையூர்: துர்காநகர் கோவிந்தராஜ் 45. இவர் பேரையூர் பஸ் ஸ்டாண்டில் அலைபேசி கடை வைத்திருந்தார். டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) பேரையூரில் இருந்து சாப்டூர் சென்ற போது அத்திபட்டி விலக்கு அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
இருதரப்பு மோதல்
வாடிப்பட்டி: மேட்டு நீரேத்தானில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த ஆதரவு, எதிர்ப்பு என இருதரப்பிடையே முன் விரோதத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று ஒரு தரப்பினர் கிராம மந்தையில் இருந்தவர்களை கட்டை, கற்களால் தாக்கியதில் சடையாண்டி, ராமச்சந்திரன், சூர்யா காயமடைந்தனர். வாகனங்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து சிலர் மதுரை, திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் 15 நிமிடங்கள் மறியல் செய்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்தனர். கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டூவீலர் மோதலில் ஒருவர் பலி
பாலமேடு: அலங்காநல்லுார் பகுதி மணிகண்டன் 45, பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று மதியம் மகன் சுருதிஹானுடன் 10, டூவீலரில் பாலமேடு சென்று திரும்பினார். அய்யனார் கோயில் அருகே வந்தபோது எதிரே எர்ரம்பட்டி செந்தில் 43, ஓட்டிவந்த டூவீலர் மீது (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) மோதியது. இதில் மணிகண்டன் இறந்தார், சுருதிஹான், காயமடைந்த செந்தில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போக்சோவில் கொத்தனார் கைது
வாடிப்பட்டி: நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முருகன் 45, கொத்தனார். இவர் அப்பகுதியை சேர்ந்த வாய்பேச முடியாத 13 வயது சிறுமியை, காலியாக இருந்த வீட்டிற்குள் அழைத்து சென்று தவறான நோக்கத்தில் நெருங்கி உள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அவரது தந்தை அவரை மீட்டார். தப்பிச் சென்ற முருகனை 'போக்சோ' வழக்கில் சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
மதுரை: ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் எஸ்.ஐ., மோகன்லால் தலைமையில் போலீசார் சோதனை மேற் கொண்டனர். திருப்பரங்குன்றம் ரோடு பாலத்தில் மேலவாசல் விக்னேஷ் 28, கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்து, 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* செல்லுார் போலீசார் சோதனையில் சிம்மக்கல் புதுப்பாலம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா விற்ற ஜீவா ரோடு பகுதியை சேர்ந்த கணேசனை 57, கைது செய்தனர். அவரிடமிருந்து 1.500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
* திருப்பாலையில் பொறியாளர் நகரில் கஞ்சா விற்ற ஆனையூர் பூவரசனை 27, கைது செய்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .
வாலிபர் மீது போக்சோ வழக்கு
மதுரை: அண்ணாநகர் மாசிமலை 23. அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார். இருவரும் இந்திரா காலனியில் உள்ள விநாயகர் கோயில் திருமணம் செய்துகொண்டனர். மகளிர் நல அலுவலர் மகாலட்சுமிக்கு தகவல் கிடைத்ததால், அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். மாசிமலை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
புகையிலை விற்றவர்கள் கைது
கொட்டாம்பட்டி: இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் பள்ளபட்டி அரசு பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்ற பள்ளபட்டி ரஹ்மத்துல்லா 35, அலிபாதுஷா 34, குருவார்பட்டி கருப்பையா 36, ஆகியோரை கைது செயது 3.770 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மாணவர் தற்கொலை
பேரையூர்: பேரையூர் அருகே பி.தொட்டியபட்டி சிவக்குமார் மகன் சுரேந்தர் 20. இவர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த இவர் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.