ADDED : மார் 10, 2025 05:10 AM

போலீஸ்காரர் ------------------------- தற்கொலை
உசிலம்பட்டி: செல்லம்பட்டியை சேர்ந்தவர் போலீஸ்காரர் கண்ணன் 35. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர் தற்போது மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு திருமணம் ஆகி பவித்ரா என்ற மனைவி, இரண்டு பெண் குழந்தையும் உள்ளனர். தற்கொலை காரணம் குறித்து வாலாந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்மாயில் மூழ்கி பலி
திருமங்கலம்: சாத்தங்குடியைச் சேர்ந்த கோட்டையன் 40, கூலித் தொழிலாளி. ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று காலை புலியூர் கண்மாய் அருகே கண்மாய் தண்ணீரில் ஆடுகளை இறக்கி குளிக்க வைத்துள்ளார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். ஆடுகள் மேய்ச்சல் முடிந்து வழக்கம் போல் வீட்டிற்கு வந்துள்ளன. ஆடுகள் மட்டும் வந்த நிலையில் கோட்டையன் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கண்மாய் பகுதியில் தேடிப் பார்த்தனர். அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிந்தது. திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மண் லாரிகள் பறிமுதல்
பாலமேடு: சுக்காம்பட்டியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் செல்வகணபதி, துணைத் தாசில்தார் சிங்காரவேலன், ஆர்.ஐ., வடிவேல் நேற்று காலை வாகன சோதனை செய்தனர். பாலமேட்டில் இருந்து அலங்காநல்லுார் நோக்கி உரிய ஆவணங்கள் இன்றி கிராவல் மண் ஏற்றி வந்த 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து பாலமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பிய டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒருவர் பலி
கொட்டாம்பட்டி : து.புதுப்பட்டி விஷால் 21, நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் அதே ஊரை சேர்ந்த காந்தியை 31, அழைத்துக் கொண்டு கொட்டாம்பட்டியில் இருந்து ஊருக்கு திரும்பினார். மணப்பட்டி அருகே பின்னால் சென்ற அரசு பஸ் மோதி விஷால் இறந்தார். காந்தி மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் விஜய் விசாரிக்கின்றனர்.
குளிக்க சென்றவர் பலி
மேலுார் : நாளங்காடி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் 46, கூலித் தொழிலாளி. நேற்று காலை பட்டாளம் கண்மாய்க்கு குளிக்க சென்றபோது தடுமாறி தண்ணீரில் விழுந்தவர் நீரில் மூழ்கி இறந்தார். எஸ். ஐ., ஜெயக்குமார் விசாரிக்கிறார்.
மஞ்சுவிரட்டில் ஒருவர் பலி
மேலுார் : சேக்கி பட்டி முத்தாளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. அதே ஊரை சேர்ந்த விவசாயி குமரவேல் 52, வேடிக்கை பார்க்க சென்றபோது மாடு முட்டியதில் இறந்தார். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
வேன் கவிழ்ந்து ---------------------- 10 பேர் காயம்
கொட்டாம்பட்டி: திருச்சி, பாலக்கரை பூமி சந்திரன் 35, உணவகம் வைத்துள்ளார். தனது மகனுக்கு மதுரை, பாண்டி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நேற்று காலை உறவினர்கள் 15 பேருடன் வேனில் சென்றார். திருச்சுனை அருகே சென்றபோது வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் பூமி சந்திரன் 35, ரங்கராஜன் 32, மாணிக்கம் 30 உள்ளிட்ட 10 பேருக்கு சிறுகாயம் ஏற்பட்டு மதுரை, மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் விஜய் விசாரிக்கின்றனர்.