/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேளாண் துறையில் உயிர்உரம் நுண்ணுாட்ட உரங்கள் உற்பத்தி * தனியாரிடம் கொள்முதல் செய்யும் தோட்டக்கலைத்துறை
/
வேளாண் துறையில் உயிர்உரம் நுண்ணுாட்ட உரங்கள் உற்பத்தி * தனியாரிடம் கொள்முதல் செய்யும் தோட்டக்கலைத்துறை
வேளாண் துறையில் உயிர்உரம் நுண்ணுாட்ட உரங்கள் உற்பத்தி * தனியாரிடம் கொள்முதல் செய்யும் தோட்டக்கலைத்துறை
வேளாண் துறையில் உயிர்உரம் நுண்ணுாட்ட உரங்கள் உற்பத்தி * தனியாரிடம் கொள்முதல் செய்யும் தோட்டக்கலைத்துறை
ADDED : ஆக 28, 2024 08:04 PM

மதுரை:இரண்டு துறைகளுக்கும் ஒரே அமைச்சர், செயலாளர் இருந்தாலும் வேளாண் துறை உற்பத்தி செய்யும் உயிர் உரம், நுண்ணுாட்ட உரங்களை தோட்டக்கலை துறையினர் வாங்காமல் தனியாரிடம் கொள்முதல் செய்கின்றனர்.
வேளாண் துறையின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், விதைச்சான்று, வேளாண் வணிகத்துறைகள் செயல்படுகின்றன. அனைத்திற்கும் ஒரே அமைச்சர், செயலாளர் தான் உள்ளனர். ஆனால் வேளாண் துறை, தோட்டக்கலை துறைகளுக்கு இடையே திட்டங்களிலும் மானியங்களிலும் நிறைய பாரபட்சம் இருப்பதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் வேளாண் துறையின் கீழ் 14 யூனிட்கள் மூலம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், அசோ பாஸ், பொட்டாஷ் மொபைலைசிங் பாக்டீரியா, ஜிங்க் சால்யூபுல் பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நெல், பயறு, பிற தானியம், எண்ணெய் வித்துகள், பருத்தி, தோட்டக்கலை பயிர்களுக்கு என தனித்தனியாக 14 வகையான நுண்ணுாட்ட உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வளவு டன் உரங்களை விற்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்படுகிறது.
பாராமுகத்தில் தோட்டக்கலைத்துறை:
வேளாண் துறை தயாரிக்கும் உயிர் உரங்களையும் நுண்ணுாட்ட உரங்களையும் தோட்டக்கலைத்துறையினர் வாங்குவதில்லை. இதே உரங்களை டெண்டர் முறையில் தனியாரிடம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்குகின்றனர். வேளாண் துறையில் ஒரே விவசாயிக்கு விதை, உயிர்உரம், நுண்ணுாட்ட உரம் என எல்லா பொருட்களையும் தருவதில்லை. வெவ்வேறு திட்டங்களின் கீழ் வெவ்வேறு விவசாயிகளுக்கு தரவேண்டியுள்ளது. தோட்டக்கலைத் துறையில் ‛பேக்கேஜ்' அடிப்படையில் ஒரே விவசாயிக்கு அனைத்துப் பொருட்களும் வழங்கப்படுகிறது.
பூச்சிமருந்து தெளிக்கும் கருவியை வேளாண் துறையின் கீழ் 50 சதவீத மானிய விலையில் தந்தால் தோட்டக்கலைத்துறையில் முழு மானியத்தில் இலவசமாக தருகின்றனர். இந்த பாரபட்சமான அணுகுமுறையால் விவசாயிகள் எங்களை சந்தேகப்படுகின்றனர். நாங்கள் பணம் கேட்கிறோம் என நினைத்து வாதம் செய்கின்றனர்.
ஒரே அமைச்சர், செயலாளரின் கீழ் துறைகள் இருப்பதால் பாரபட்சமற்ற திட்டங்களையும் மானியங்களையும் அரசு அறிவிக்க வேண்டும். வேளாண் துறை உற்பத்தி செய்யும் உயிர் உரம், நுண்ணுாட்ட உரங்களை மட்டுமே தோட்டக்கலை வாங்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என்றனர்.