/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துவரம்பருப்புக்கு பதிலாக சிவப்பு மசூர் தரவேண்டும்
/
துவரம்பருப்புக்கு பதிலாக சிவப்பு மசூர் தரவேண்டும்
ADDED : ஆக 14, 2024 12:47 AM
மதுரை : ரேஷன் கடைகளில் துவரம்பருப்புக்கு பதிலாக சிவப்பு மசூர் பருப்பை விற்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
சங்க இணைச் செயலாளர்ராகவேந்திரா கூறியதாவது: நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழக அரசு துவரம்பருப்பை கொள்முதல் செய்யும் போதெல்லாம் பருப்பின் விலை அதிகரிக்கிறது. தற்போது கிலோ ரூ.180க்கு விற்கப்படுகிறது. இதற்கு பதிலாக ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யாவில் இருந்து சிவப்பு மசூர் பருப்பை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். சிவப்பு மசூர் பருப்பு கிலோ ரூ.72க்கு விற்கப்படுகிறது. இதில் சாம்பார் வைத்தால் பருப்பின் நிறம் மஞ்சளாக மாறிவிடும். சுவையும் வித்தியாசம் தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடைகளில் சிவப்பு மசூர் பருப்பு நுகர்வோருக்கு வழங்கப்பட்டது. அதே நடைமுறையை தற்போதும் பின்பற்ற வேண்டும். சிவப்பு மசூர் பருப்பை இறக்குமதி செய்ய ஆரம்பித்தால் துவரம்பருப்பின் விலை தானாக இறங்கி விடும். தேவைப்படுபவர்கள் வாங்க ஆரம்பிப்பர்.
பச்சை பட்டாணி பருப்பு கடந்தாண்டு கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.170க்கு விற்கப்படுகிறது. வெள்ளை பட்டாணியின் விலை ஜனவரி, பிப்ரவரியில் கிலோ ரூ.70 ஆக இருந்தது. மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி அளித்ததால் விலை ரூ.38 ஆக இறங்கி விட்டது. போதுமான அளவுக்கு இறக்குமதியாகி விட்டதால் இன்னும் இரண்டாண்டுகளுக்கு இந்த விலையில் மாற்றம் இருக்காது.
பச்சை பட்டாணி இறக்குமதிக்கு ஆறாண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடையை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். இறக்குமதி அனுமதி கிடைத்தால் பச்சை பட்டாணி விலை கிலோ ரூ.100க்கு கீழே குறைந்து விடும். இதனால் பயன்பெறுவது மக்கள் தான் என்றார்.

