/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீக்கியது அதிகம்; சேர்த்தது குறைவு; மதுரையில் தொழிற்சாலை நில வகைப்பாட்டில் குழப்பம் ; 'மாஸ்டர் பிளான் திட்டத்தால்' தொழில் துறையினர் அதிர்ச்சி
/
நீக்கியது அதிகம்; சேர்த்தது குறைவு; மதுரையில் தொழிற்சாலை நில வகைப்பாட்டில் குழப்பம் ; 'மாஸ்டர் பிளான் திட்டத்தால்' தொழில் துறையினர் அதிர்ச்சி
நீக்கியது அதிகம்; சேர்த்தது குறைவு; மதுரையில் தொழிற்சாலை நில வகைப்பாட்டில் குழப்பம் ; 'மாஸ்டர் பிளான் திட்டத்தால்' தொழில் துறையினர் அதிர்ச்சி
நீக்கியது அதிகம்; சேர்த்தது குறைவு; மதுரையில் தொழிற்சாலை நில வகைப்பாட்டில் குழப்பம் ; 'மாஸ்டர் பிளான் திட்டத்தால்' தொழில் துறையினர் அதிர்ச்சி
ADDED : மார் 25, 2024 05:23 AM
மதுரை : மதுரை மாவட்டம் நகர் ஊரமைப்பு வரைவு முழுமை திட்டத்திற்கான (2041 வரை) உள்ளூர் திட்ட குழுமத்தால் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தின் போது, தொழிற்சாலைகளுக்காக ஏற்கனவே இருந்த நில வகைப்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் கூறியதாவது: 1992 முதல் 2041 வகையான புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் ஏற்கனவே தொழிற்சாலை பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களை விவசாய பயன்பாட்டு நிலமாகவும் வணிகப் பயன்பாட்டிற்காகவும் மாற்றியுள்ளனர். அது பற்றி விளக்கம் கேட்டபோது அவை தொழிற்சாலை பயன்பாட்டிற்கு இதுவரை வராததால் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
நில வகைப்பாடு மாறி மாறி வரும் போது தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படும். குடியிருப்பு பகுதியினர், விவசாய பகுதியை சேர்ந்தவர்களால் எங்களுக்கு பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. புதிய மாஸ்டர் பிளான் வரைபடத்தில் 70 கிராமங்களில் 1304 சர்வே எண் அளவிற்கு தொழிற்சாலைக்கான நில வகைப்பாடு இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலை நில ஒதுக்கீடாக மாநகராட்சி பகுதிகளில் 3.20 ல் இருந்து இருந்து 3.93 சதவீதமாகவும் கிராமப் பகுதிகளில் 15.21ல் இருந்து 29.11 சதவீதமாக உயர்த்தியதை வரவேற்கிறோம். ஆனால் ஏற்கனவே தொழிற்சாலை நில வகைப்பாட்டின் கீழ் 85 கிராமங்களில் இருந்த 1526 சர்வே எண்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்த பட்சம் 2000 ஏக்கர் தொழிற்சாலை நிலம் பறிபோகிறது. தவிர 17 கிராமங்கள் முழுமையாக தொழிற்சாலை நில வகைப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கீட்டின்படி பார்த்தால் ஒரு சதவீத இடம் கூட கூடுதலாக அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் புதிய மாஸ்டர் பிளான் வரைவு வெளிவருமானால் இன்னும் 20 ஆண்டுகளில் சிறு குறு தொழில்கள் இல்லாத மதுரை மாவட்டம் உருவாகும். ஏற்கனவே தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் இருப்பதால் 15 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தால் மட்டுமே தொழில்கள் வளர்ச்சி பெறும்.
மேலும் சிவகங்கை மாவட்ட எல்லைக்கு அருகிலும், மதுரையில் நெடுங்குளம் - வலையங்குளம் இடையில் உள்ள சோளங்குருணி, குசவபட்டி, நல்லுார் மற்றும் நகரி எல்லையில் தனிச்சியம், சித்தாலங்குடி, வாடிப்பட்டி, மதுரை வேளாண் பல்கலை நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள அரசு நிலங்களை சிறு குழுமத் தொழில்கள் செய்வதற்கான நிலமாக அறிவிக்க வேண்டும். புதிய வரைவு திட்டம் தயாரிக்கும் போது ஏற்கனவே நீக்கப்பட்ட சர்வே எண்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என உள்ளூர் திட்ட குழும துணை இயக்குநர் மஞ்சுவிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

