ADDED : மார் 31, 2024 04:40 AM
மேலுார் : 'மதுரை தொகுதியின் எம்.பி., வெங்கடேசன் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை செய்கிறார்' என, பா.ஜ., வேட்பாளர் ராமஸ்ரீனிவாசன் பேசினார்.
மேலுாரில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும், தொடர்ந்து அனைத்து சமுதாய பிரமுகர்களையும் மதுரை பா.ஜ., வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் சந்திந்தார். கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பிரசாரம், ஓட்டு சேகரிப்பது குறித்து ஆலோசித்தார்.
மாவட்ட தலைவர் ராஜசிம்மன், பொதுச் செயலாளர் கண்ணன், நகர் தலைவர் சேவுகமூர்த்தி, நிர்வாகி தர்மலிங்கம், அ.ம.மு.க., அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு குழு, த.மா.கா., உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராம ஸ்ரீனிவாசன் பேசியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தை மாற்றி மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என பொய்யான வாக்குறுதிகளை கூறி, அரசு ஊழியர்களை ஏமாற்றி தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் அக் கட்சியின் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் இத் திட்டத்திற்கு சாத்தியக்கூறு இல்லை என்று கூறினார். மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன், மத்திய அரசு செய்த திட்டங்களை தான் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டும் எம்.பி.,யாக உள்ளார். அவரால் மதுரை தொகுதிக்கு மாநில அரசிடமிருந்து நிதி பெற்று இதைச் செய்தேன் என்று எதனையும் கூற முடியாது. தேசிய அளவில் வெற்றி பெறும் 400 பா.ஜ., வேட்பாளர்களில் நானும் ஒருவனாக இருப்பேன் என்றார்.
