/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த தமிழக அரசு; விவசாய சங்கங்கள் கொதிப்பு
/
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த தமிழக அரசு; விவசாய சங்கங்கள் கொதிப்பு
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த தமிழக அரசு; விவசாய சங்கங்கள் கொதிப்பு
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த தமிழக அரசு; விவசாய சங்கங்கள் கொதிப்பு
ADDED : பிப் 23, 2025 05:59 AM
மதுரை : 'நெல் கொள்முதல் மையங்களை கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்,' என, அனைத்து விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளன.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தேவையான அரிசியை மத்திய அரசு உணவுக் கழகம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல்லாக பெறுகிறது. இதற்காக அந்தந்த கிராமங்களில் நெல் கொள்முதல் மையம் அமைத்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
அதற்குரிய தொகை 48 மணி நேரத்திற்குள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இம்முறையில் ஆண்டுதோறும் விவசாயிகளிடம் இருந்து 37.5 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படுகிறது.
நுகர்பொருள் வாணிப கழகத்தின் உரிமையை தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்தில் பதிவு செய்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில கவுரவத்தலைவர் ராமன் கூறியதாவது: இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் நெல் கொள்முதல் மையங்களை கையகப்படுத்தி கொள்முதல் செய்ய துவங்கும். இந்தாண்டு 2024 - 25 ஆண்டுக்கான காரீப் பருவத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் கொள்முதல் மையங்கள் தனியார் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும். தற்போதே பணத்தை தர 20 நாட்கள் வரை இழுத்தடிக்கின்றனர். பணம் வராமல் போனால் அதை யாரிடம் முறையிடுவது. இவர்கள் எந்த ஒரு வரையறைக்குள்ளும் வரமாட்டார்கள். நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ் கட்டப்பட்டுள்ள கிட்டங்கி, அலுவலகங்களை கையகப்படுத்திக் கொள்வர்.
தந்தை உருவாக்கினார் மகன் அழிக்கிறார்
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1989ல் நுகர்பொருள் வாணிப கழகம் உருவாக்கப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் நெல் கொள்முதல் மையங்களை கையகப்படுத்தும்போது ஆயிரக்கணக்கான நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களின் வேலை பாதிக்கும்.
அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்து விடும். முதல்வரே தாரை வார்த்தது மிகப்பெரிய அவமானம். நாங்கள் சென்னையில் இதற்கான அரசாணை நகலை எரித்து போராடினோம். டெல்டா மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.
தந்தை உருவாக்கியதை மகன் ஸ்டாலின் அழிக்க நினைக்கிறார். இதை தடுத்து நிறுத்தாவிட்டால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவர்.
தமிழக அரசு இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்றார்.

