/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முல்லைப்பெரியாறு அணையில் ஜெ., பெற்றுத்தந்த உரிமைகளை பறிகொடுக்கும் நிலையில் தமிழக அரசு * போராட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
/
முல்லைப்பெரியாறு அணையில் ஜெ., பெற்றுத்தந்த உரிமைகளை பறிகொடுக்கும் நிலையில் தமிழக அரசு * போராட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
முல்லைப்பெரியாறு அணையில் ஜெ., பெற்றுத்தந்த உரிமைகளை பறிகொடுக்கும் நிலையில் தமிழக அரசு * போராட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
முல்லைப்பெரியாறு அணையில் ஜெ., பெற்றுத்தந்த உரிமைகளை பறிகொடுக்கும் நிலையில் தமிழக அரசு * போராட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : மே 28, 2024 09:10 PM

மதுரை:''தமிழகத்தின் நீராதார உரிமைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா துணிவாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதை பின்பற்றி முதல்வர் ஸ்டாலின் செயல்பட வேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் ஜெயலலிதா பெற்று கொடுத்த உரிமைகளை பறிகொடுக்கும் நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது,'' என, மதுரையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பாண்டியன் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் அமைப்பு, கூட்டமைப்பு சார்பில் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட கேரளாவை அனுமதிப்பதை தடுத்து நிறுத்தக்கோரி மதுரையில் போராட்டம் நடந்தது. சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள அரசின் விண்ணப்பத்தை ஏற்று ஆய்வுக்குழுவுக்கு அனுமதி கொடுத்து உத்தரவிட்ட சட்ட நகலை விவசாயிகள் எரித்தனர்.
பின் குழுத்தலைவர் பாண்டியன் பேசியதாவது: கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்ப கடிதத்தை ஜனவரியில் கொடுத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை வலுவானது, 152 அடி நீர் தேக்கலாம் என்ற் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாகவும் அவமதிப்பாகவும் இந்த விண்ணப்ப கடிதமும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதியும் உள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் சட்டப்போராட்டம் நடத்தி 142 அடி நீரை தேக்கிவைக்க அனுமதி பெற்றதை அடுத்து 142 அடி வரை நீர் நிரப்பி பாசனம் செய்தோம். தற்போது 137 அடிக்கு மேல் தண்ணீரை நிரப்ப விடாமல் கேரளா அரசு அணையை தன்வசப்படுத்தி வைத்துள்ளது. கேரள அரசின் 'ரூல் கர்வ் 'முறையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதுபோல கேரள அமைச்சர்களே அணையை திறந்து விடும் அடாவடி செயலிலும் ஈடுபடுகின்றனர். அதை தடுத்து நிறுத்தவோ, சட்ட நடவடிக்கை எடுக்கவோ முதல்வர் ஸ்டாலின் முன்வரவில்லை.
அரசின் கையில் அதிகாரம் இல்லை:
அணைக்கு சென்று வருவதற்கான தமிழக படகு நிறுத்தப்பட்ட அதே இடத்தில் இன்று வரை நிற்கிறது. அதை இயக்கவில்லை. மின்சார இணைப்பும் கொடுக்கவில்லை. பேபி அணையை பலப்படுத்துவதற்கான கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்கோ சாலை அமைப்பதற்கோ இதுவரை கேரள அரசின் அனுமதியை தமிழக அரசு பெறவில்லை. அணைக்கு சென்று வருவதற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவதற்கு தனித்தனி உத்தரவை உச்சநீதிமன்றம் வெளியிட்டும் இன்றுவரை நிறைவேற்றவில்லை.
அணையின் நீர் நிர்வாக முறையை தமிழக பொறியாளர்கள் நேரில் சென்று கண்காணிக்க முடியவில்லை. கேரள காவல் துறை கட்டுப்பாட்டுடனும் அச்சுறுத்தலுடனும் தான் சென்று வருகின்றனர். நீர் நிலை அதிகாரமே தமிழக அரசின் கையில் இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது. கேரள அரசு தான் நிர்வாகம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
விவசாயிகளை அவமதித்தால் மிகப்பெரிய எதிரொலியை தமிழக அரசு சந்திக்க நேரிடும். உடனடியாக கேரள அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தமிழக அரசு தொடரவேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளாகிய நாங்கள் வழக்கு தொடருவோம். இவ்வாறு அவர் பேசினார்.
ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ராமன், மணிகண்டன், பிற சங்க நிர்வாகிகள் மதுரை வீரன், உறங்காபுலி, முத்துராமலிங்கம், ஆதிமூலம், அருண், மாணிக்கவாசகம், அழகுசேர்வை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.