ADDED : ஆக 02, 2026 05:02 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் துவக்கத்தில் வழிகாட்டி போர்டு இல்லாததால் வாகன ஓட்டுநர்கள், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
திருப்பரங்குன்றம் ஊருக்குள் செல்வோரும், அனைத்து அரசு டவுன் பஸ்களும் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. மற்ற வாகனங்கள் சர்வீஸ் ரோட்டில் செல்கின்றன.
ஹார்விபட்டி பகுதியில் பாலத்தின் நுழைவு வாயிலில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் வழி என்ற வழிகாட்டி போர்டு இல்லை. அதேபோன்று சர்வீஸ் ரோட்டில் சென்றால் எந்த பகுதிக்கு செல்லலாம் என்ற வழிகாட்டி போர்டும் இல்லை. இதனால் திருமங்கலம் பகுதியில் இருந்து கோயிலுக்கு வருவோர் பாலத்தின் முன்பு வாகனங்களை நிறுத்தி விசாரித்து செல்கின்றனர். இதனால் தேவையற்ற நெரிசல் ஏற்படுகிறது. பலர் சர்வீஸ் ரோட்டில் பல கி.மீ., துாரம் சென்று விசாரித்து பசுமலை வரை சென்று விசாரித்து, மீண்டும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திரும்பி வருகின்றனர்.
இக்குழப்பத்தை தவிர்க்க பாலத்தின் நுழைவு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மிகச் சிறிய அளவில், மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் வழி, திருப்பரங்குன்றம் செல்லும் வழி என போர்டுகள் அமைக்கப்பட்டது. அவையும் அகற்றப்பட்டு விட்டன. எனவே மீண்டும் அதே இடத்தில் தெளிவான வழிகாட்டி போர்டு அமைக்க வேண்டும்.
