/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தந்தை இறந்தது தெரியாமல் அறையில் தவித்த மகள்
/
தந்தை இறந்தது தெரியாமல் அறையில் தவித்த மகள்
ADDED : மே 30, 2024 07:25 PM
திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தந்தை இறந்தது தெரியாமல் அறைக்குள் தவித்த மனநலம் பாதித்த 42 வயது மகள், சாவி உள்ள இடம் தெரியாமல் தவித்தார். அவரையும், தந்தையின் உடலையும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் சேதுராமன், 77. மனைவி இறந்து விட்ட நிலையில், மனநலம் பாதித்த 42 வயது மகளுடன் திருமங்கலம் கற்பக நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மூன்று நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிப்பிற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சேதுராமன், வீட்டின் முன் அறையில் துாங்கினார். மகள் தனி அறையில் துாங்கினார். நேற்று முன்தினம் காலை எழுந்த மகள், கதவை திறக்க தன் அறையின் சாவியை தேடினார்; தந்தையை அழைத்தார்.
ஆனால் அவரின் தந்தை, மாரடைப்பால் இறந்ததை மகளால் அறிய முடியவில்லை. இரவு வரை தந்தையை அழைத்தும் பதில் இல்லாததால் வீட்டின் உரிமையாளரின் மொபைல் போனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து அழுகிய நிலையில் இருந்த சேதுராமன் உடலை மீட்டனர்; உள் அறையில் தவித்த மகளையும் மீட்டனர். உறவினர்கள் உதவியோடு அப்பெண்ணை காப்பகத்தில் சேர்ப்பது குறித்து போலீசார் ஆலோசிக்கின்றனர்.