/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் திருக்கல்யாணம் இன்று தேரோட்டம்
/
குன்றத்தில் திருக்கல்யாணம் இன்று தேரோட்டம்
ADDED : மார் 29, 2024 06:32 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இன்று(மார்ச் 29) காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை சுவாமி, தெய்வானை மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர் சந்திப்பு மண்டபம் வந்தனர்.
பெற்றோரை வரவேற்கும் நிகழ்ச்சி முடிந்து கோயிலுக்குள் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர்.
பின்னர் திருமண சடங்கு நடந்தது. மாப்பிள்ளை பிரதிநிதியாக சங்கர், பெண் பிரதிநிதியாக அஜித் சுந்தர சுப்பையா சிவாச்சாரியார்கள் சடங்கை நடத்தினர். சுவாமிக்கு வெண் பட்டு, தெய்வானைக்கு பச்சை கலர் பட்டு சாத்துப்படி செய்யப்பட்டது. மதியம் 1:02 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு 16 கால் மண்டபம் முன்பு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, பூப்பல்லக்கில் தெய்வானை எழுந்தருளினர். அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையிடம் விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. சோலைமலை முருகன் கோயிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, கோயில் துணை கமிஷனர் சுரேஷ், கண்காணிப்பாளர் ரஞ்சனி கலந்து கொண்டனர்.
தினமலர் செய்தி எதிரொலியாக கோயிலுக்கு முன்பு சன்னதி தெருவில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டது.

