/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'டாப் 100' : ரூ.35 கோடி வரி பாக்கியால் நிறுவனங்களுக்கு சிக்கல்: மதுரை மாநகராட்சியில் ரூ. 221 கோடி வரி வசூல்
/
'டாப் 100' : ரூ.35 கோடி வரி பாக்கியால் நிறுவனங்களுக்கு சிக்கல்: மதுரை மாநகராட்சியில் ரூ. 221 கோடி வரி வசூல்
'டாப் 100' : ரூ.35 கோடி வரி பாக்கியால் நிறுவனங்களுக்கு சிக்கல்: மதுரை மாநகராட்சியில் ரூ. 221 கோடி வரி வசூல்
'டாப் 100' : ரூ.35 கோடி வரி பாக்கியால் நிறுவனங்களுக்கு சிக்கல்: மதுரை மாநகராட்சியில் ரூ. 221 கோடி வரி வசூல்
ADDED : மார் 22, 2024 04:56 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் இந்தாண்டு வரி வருவாய் ரூ.221 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.அதிக வரி நிலுவை வைத்துள்ள 'டாப் 100' நிறுவனங்களுக்கு 'சீல்' வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மாநகராட்சிக்கு சொத்து, காலிமனைகள், தொழில், குத்தகை, பாதாளசாக்கடை, குடிநீர் உள்ளிட்ட வரிகள், கடைகள் வாடகை மூலம் வருவாய் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் தான் சம்பளம் உட்பட மாநகராட்சி செலவுகள் மேற்கொள்ளப்படும். ஆனால் வரிகள் நிலுவை ரூ.354 கோடி இருந்தது. இவற்றை வசூலிக்க கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவில் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் இந்தாண்டு ரூ.221 கோடி வரி வசூலானது. கடந்தாண்டு ரூ.197 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.24 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 1974 முதல் சில நிறுவனங்கள் வைத்துள்ள நிலுவை வரி ரூ.9 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், மால்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பல ஆண்டுகளாக வரி நிலுவையாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் வரி வசூல் அதிகரித்தால் தான் மத்திய அரசின் நிதிக்குழு மானியம் மாநகராட்சிக்கு கிடைக்கும். இதனால் இந்தாண்டு கமிஷனர் தினேஷ்குமாரால் வரிவசூல் தீவிரப்படுத்தப்பட்டது. மதுரையில் பல தனியார் நிறுவனங்கள் ரூ.பல கோடி நிலுவை வைத்துள்ளன. ஆனால் வரிவிதிப்பில் உள்ள சில தவறுகளை காட்டி நீதிமன்றம் தடையுத்தரவு பெற்றுள்ளன.
முறையான நடவடிக்கைகள் மூலம் அந்நிறுவனங்களின் நிலுவை விரைவில் வசூலிக்கப்படும். மேலும் சில நிறுவனங்கள் அரசியல் பின்புலத்தில் வரி செலுத்தாமல் உள்ளன. இதுகுறித்து அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் 'டாப் 100' நிறுவனங்களில் இருந்து ரூ.35 கோடி நிலுவை உள்ளது. அந்நிறுவனங்கள் மீது பூட்டி 'சீல்' வைப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். வரிவிதிப்பு குழு முடிவை மீறி நீதிமன்றம் சென்ற நிறுவனங்களின் வழக்குகளை சந்தித்தும் வரி வசூலிக்க நடவடிக்கை எடுப்பதால் வரிவசூல் தொகை மேலும் அதிகரிக்கும் என்றார்.

